பிளாஷ்பேக் : தியேட்டரில் தோற்று, வரலாற்றில் வென்ற படம் 'கப்பலோட்டிய தமிழன்'
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எந்த கேரக்டரை கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார். அது சிறப்பில்லை. ஆனால் வரலாற்று நாயகர்களை அவர் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது தான் சிறப்பு. மராட்டிய மாவீரன் சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இப்படி எத்தனையோ வரலாற்று புருஷர்களுக்கு மறுஉருவம் கொடுத்தவர் சிவாஜி. அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும்வகையில் 'கப்பலோட்டிய தமிழன்' பற்றிய நினைவலைகள்.
'கப்பலோட்டிய தமிழன்' 1961ம் ஆண்டு பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது. அவரே இயக்கியும் இருந்தார். 1936ல் வ.உ.சி மரணம் அடைந்தார். அதிலிருந்து 25 ஆண்டுகள் கழித்து 'கப்பலோட்டிய தமிழன்' படம் வெளிவந்தது. இந்தப் படம் வருவதற்கு முன்பே டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழு வ.உ.சி நாடகத்தை நடத்தி வந்தது. அந்த நாடகத்தை தழுவியே படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் உருவானது. படம் முழுவதும் ஸ்டுடியோவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. சில காட்சிகளே வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
வள்ளியப்பன் உலகநாதபிள்ளை சிதம்பரம் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பெரும் செல்வந்தரான அவர் ,'உப்பளம்' வைத்திருக்கிறார். அதை நடத்திக் கொண்டே இந்திய சுதந்திர போராட்டத்தில பங்கேற்கிறார். தூத்துக்குடியில் இருந்த தமிழக முதலாளிகளின் உப்பு மூட்டைகளை இலங்கைக்கு கொண்டு செல்ல ஆங்கிலக் கப்பல்கள் மறுக்கின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 'நமக்கான கப்பலின் தேவை' என்கிற கருத்து உந்த - பல்வேறு நபர்களிடம் பங்கு சேகரிக்கப்பட்டு 'சுதேசி கப்பல் கம்பெனி' உருவாக்குகிறார். இந்திய தேசியக் காங்கிரசின் தீவிர செயல்பாட்டாளர்களான லாலா லஷபதிராய், பாலகங்காதர திலகர், சி.ஆர்.தாஸ், பாரதியார் முதலியவர்களுடன் இணைந்து தென்னிந்தியாவில் ஆங்கில ஏகாதிபதித்தியத்திற்கு எதிராக போராட்டங்களான, 'அந்நியத் துணி எரிப்பு', 'ஆலைத் தொழிலாளர் போராட்டம்' போன்றவற்றை முன்னெடுக்கிறார்.
ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு, வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கிறது. கண்ணனூர் சிறைகளில் செக்கிழுத்தும், அதிகப்படியாக வேலை வாங்கியதால் உருக்குலைந்தும் போகிறார். சிறைக் கைதிகளுக்கான எந்தச் சலுகையும் வ.உ.சிக்கு மறுக்கப்படுகிறது.
வ.உ.சிக்கு வழக்காடும் உரிமை பறிக்கப்படுகிறது. வீடு, உப்பளம், கப்பல் கம்பெனி எல்லாவற்றையும் இழந்து சென்னை பெரம்பூரில் இருந்து கொண்டு மண்ணடியில் மண்ணெண்ணை விற்கிறார். திருக்குறள் மணக்குடவர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதலிய நூற்களைப் பதிப்பிக்கிறார். திலக முனிவர், யான்கண்ட பாரதி, மற்றும் அவர் தனது சுயசரிதை எழுதுவதோடு படம் முடிவடையும்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. ஆனால் படம் வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் அன்றைக்கு இருந்த அரசியல் சூழல். ஆனால் காலம் கடந்து மக்கள் மனதில் படம் வெற்றி பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு படம் மறுவெளியீடு செய்யப்பட்டபோது அதற்கு அரசு வரிவிலக்கு கொடுத்தது. இதன் மூலம் தயாரிப்பாளர் பந்துலு தனது நஷ்டத்தை ஓரளவிற்கு மீட்டுக்கொண்டார்.