ஜனநாயகன் முதல்காட்சி எப்போது..? டிக்கெட் விலை எவ்வளவு...?
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஒருவழியாக ஜூலை 23ம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரைகள், உலகம் முழுக்க 3 ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது. இன்னமும் அதிகாரப்பூர்வ டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை என்றாலும் பல தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்துவிட்டது.
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல்காட்சி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக, கர்நாடகம், ஆந்திராவில் 6 மணிக்கு முதல்காட்சி என்பதால் மாநில எல்லை ஓரத்தில் வசிப்பவர்கள் அங்கே சென்று படம் பார்க்க ஆர்வமாகி வருகிறார்கள். தமிழகத்தில் முதல்காட்சி 9 மணிக்கு தொடங்க வாய்ப்பு. சில ஆண்டுகளாகவே அதிகாலை காட்சிகள் இல்லை. 5 காட்சிகளுக்கு தடை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்நாள் குறிப்பாக, முதல் காட்சியில் ஜனநாயகன் படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காண்பிக்கிறார்கள். இதனால், பல தியேட்டர்களுக்கு பிரஷர் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தவெகவினர் முதல்நாள் மற்றும் முதல்காட்சி டிக்கெட் கேட்டு போன் செய்ய ஆரம்பித்து உள்ளார்களாம். இதனால், முதல்காட்சி, முதல்நாள் டிக்கெட் விலை எவ்வளவு? எத்தனை ஆயிரத்துக்கு விற்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாகவே விஜய் நடித்த படங்களின் முதல் காட்சி டிக்கெட் விலை 500 முதல் 1000 வரை போகும். முதல்நாள் டிக்கெட் விலையும் அதிகம். இது அவர் முதல்வர் ஆன பின் வரும் படம், அவரின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, இதுவரை இல்லாத அளவுக்கு முதல்காட்சி டிக்கெட் விலை போகும் என்று கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கினால் புகார் அளியுங்கள் என்று விஜய் அரசு போன் நம்பர் வெளியிட்டுள்ளது. ஜனநாயகன் விஷயத்திலும் அரசு சார்பில் புகார் நம்பர் தர வேண்டும். அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் புகார் கொடுக்க நம்பர், உடனே நடவடிக்கை எடுக்க தனி படை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தவெகவினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக தான் நடித்த படத்தை தியேட்டருக்கு சென்று விஜய் பார்ப்பது இல்லை. தனியார் பிரிவியூ தியேட்டரில் பார்ப்பார். ஆனால், படக்குழுவினர் ஜனநாயகன் படத்தை சென்னையில் ஏதாவது ஒரு தியேட்டரில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. சில நாட்களில் ஜனநாயகன் புது டிரைலரும் வர உள்ளதாம். ஒட்டுமொத்தத்தில் தவெகவினர், விஜய் ரசிகர்களுக்கு ஜனநாயகன் ரிலீஸ் கொண்டாட்டமாக உள்ளது. எனவேதான், முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வசூல், உலகம் முழுக்க 150 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டி சாதனைபடைக்க வேண்டும் என்று ஜனநாயகன் படக்குழுவும் பிளான் பண்ணுகிறதாம்.