பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், கருணாநிதி கலையுலகப் புகழுக்கு சான்றளித்த இரு படங்கள்
கலையுலக மேடையிலும், அரசியல் களத்திலும் சமகாலத்தில் பயணித்து, சாதனை படைத்த இருபெரும் ஜாம்பவான்கள்தான் எம் ஜி ஆர் மற்றும் மு கருணாநிதி. இவர்களது ஆரம்பகால கலையுலகப் பயணத்தின் ஆணிவேராக அமைந்த திரைப்படங்கள்தான் இந்த “மருதநாட்டு இளவரசி”யும், “மந்திரிகுமாரி”யும். கருணாநிதி கதை வசனம் எழுதி, எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்” “ராஜகுமாரி” வெற்றிக்குப் பின், இந்த இணை ஒரு ராசியான ஜோடியாக பார்க்கப்பட்டது சினிமா உலகில் அந்நாளில். 1947ல் வெளிவந்த “ராஜகுமாரி” படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தாலும், உதவி கதாசிரியர் என்றுதான் அவரது பெயரை டைட்டிலில் போட்டிருந்தனர். இதன் பின்பு வந்த “அபிமன்யூ” திரைப்படத்திற்கும் கருணாநிதி வசனம் எழுதியிருக்க, அத்திரைப்படத்திலும் இதே நிலைதான் நீடித்திருந்தது.
இதன் பின்பு 1950ம் ஆண்டு வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்கள்தான் கலையுலகில் கருணாநிதிக்கும், எம் ஜி ஆருக்குமான ஓர் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தர காரணமாக அமைந்து, ஒரு மாபெரும் திருப்பத்தை இவ்விருவரின் கலையுலகப் பயணத்திலும் ஏற்படுத்தியிருந்தது. மு கருணாநிதி திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். அதனால் எம் ஜி ஆரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்ற ஒரு ஐயப்பாடு அப்போது ரசிகர்கள் மத்தியில் நிலவியும் வந்தது. ஆனால் எம் ஜி ஆர் ஒரு தீவிர காங்கிரஸ்வாதியாகத்தான் அப்போது இருந்து வந்தார். இந்தக் காலகட்டத்தில் மு கருணாநிதி கதை வசனம் எழுத, எம் ஜி ஆர் நாயகனாக நடிக்க, 1950ம் ஆண்டு ஏப்ரலில் ஒன்றும், ஜூன் மாதத்தில் மற்றொன்றும் வெளிவந்தன.
முதலில் வெளிவந்தது “மருதநாட்டு இளவரசி”. இயக்குநர் ஏ காசிலிங்கம் இயக்கியிருந்த இத்திரைப்டத்தில் வீரதீர சாகஸம் புரியக் கூடிய ஒரு இளைஞனாக எம் ஜி ஆர் நடித்திருந்தார். எம் ஜி சக்ரபாணி, சி எஸ் டி சிங், பி எஸ் வீரப்பா, என் எஸ் நாராயணபிள்ளை, சி கே சரஸ்வதி போன்றோர் பிற கதாபாத்திரங்களில் தோன்றி நடித்திருந்தனர். படத்தின் டைட்டில் கதாபாத்திரமான மருதநாட்டு இளவரசியாகவும், படத்தின் நாயகியாகவும் நடித்திருந்தவர் வி என் ஜானகி.
அடுத்து வெளிவந்த திரைப்படம் “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் எம் ஜி ஆர், ஜி சகுந்தலா, எம் என் நம்பியார், மாதுரிதேவி, எஸ் ஏ நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்த “மந்திரி குமாரி”. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யின் கதையைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் வசனத்தையும் எழுதியது மு கருணாநிதி. எல்லீஸ் ஆர் டங்கன் மற்றும் டி ஆர் சுந்தரம் இணைந்து இயக்கியிருந்த இத்திரைப்படத்திற்குப் பின் அமெரிக்கரான இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் தமிழ் திரையுலகிலிருந்தே முற்றிலும் விலகினார்.
1950ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த “மருதநாட்டு இளவரசி”, இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஜுன் மாதத்தில் வெளிவந்த “மந்திரிகுமாரி” ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு, படத்தின் நாயகன் எம் ஜி ஆருக்கும், வசனகர்த்தாவாக பணிபுரிந்த மு கருணாநிதிக்கும் அவர்களது ஆரம்பகால கலையுலகப் பயணத்தில் பெரும் புகழ் சேர்த்த திரைப்படங்களாகவும் அமைந்திருந்தன.