ஜப்பானில் படுதோல்வியடைந்த ரன்வீர் சிங்கின் துரந்தர்!
ஜப்பான் நாட்டில் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படத்திற்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த ஆக்ஷன் டிராமா படம், ஜூலை கடந்த 10ம் தேதி அன்று ஜப்பான் முழுவதும் சுமார் 80 திரையரங்குகளில் வெளியானது. ஆனால் முதல் நாளில் 900க்கும் குறைவான பார்வையாளர்களே இந்த படத்தைப் பார்த்துள்ளனர். ஜப்பானிய சந்தையில் பெரும் விளம்பரங்களுடன் வெளியான ஒரு இந்தியத் திரைப்படத்திற்கு, இதுவரை இல்லாத அளவில் மிகக் குறைந்த ஓப்பனிங் இதுவாகும்.
இப்படம் வெளியான திரையரங்குகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், இந்த ஆரம்பக்கட்ட வசூல் சினிமா வர்த்தக உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிலவிய பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜப்பானிலும் இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெறும் என்றுதான் கணிக்கப்பட்டது. இருப்பினும், ஜப்பானிய பார்வையாளர்களால் இந்த படத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் துரந்தர் முதல் பாகத்திற்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், 2025 டிசம்பரில் வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து, மார்ச் 2026ல் வெளியான இதன் இரண்டாம் பாகமான துரந்தர்-2 உலகளவில் பாக்ஸ் ஆபீஸை உலுக்கியெடுத்தது. இரண்டு பாகங்களும் சேர்த்து உலகளவில் 3,200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற அசாத்திய சாதனையை படைத்துள்ளன.
2026ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான துரந்தர்- 2 படம் மட்டும் சுமார் 1,800 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.