உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகி ஜானகி மறைவு : துணை ஜனாதிபதி, முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல்

பாடகி ஜானகி மறைவு : துணை ஜனாதிபதி, முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல்

காலத்தால் அழியாத பாடல்களை தந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகி எஸ் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, கமல், சிம்பு, அனிருத் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
பல தலைமுறைகளாக எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்ட, ஈடு இணையற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு துயரத்தை அளிக்கிறது. தனித்துவமான உணர்வுப்பூர்வமான குரல்வளமும், அபாரமான பன்முகத்திறனும் கொண்ட எஸ். ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். கர்நாடக இசை, பக்திப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், தான் கையாண்ட ஒவ்வொரு இசை வகையிலும் அழியாத முத்திரையை பதித்தார்.

அவரது பாடல்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து, இசையின் உலகளாவிய மொழியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தன. எஸ். ஜானகி மறைவு இசை உலகிற்கும், நாட்டின் கலைப் பாரம்பரியத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்திய இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பின் மூலம், இசை ஆர்வலர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு உன்னதமான மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

முதல்வர் விஜய்
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

திமுக., தலைவர் ஸ்டாலின்
இசைக்குயில் எஸ். ஜானகியின் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகியின் இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வி தீ லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாள் காலமான செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். தான் பாடிய பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராவார். அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஜானகி அம்மாளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

ரஜினிகாந்த்
தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

கமல்ஹாசன்
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவருக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜிகே தமிழ்குமரன்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் 48,000-கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய தேன் குரலுக்கு சொந்தகாரர், MSV முதல் இன்றைய அனிருத் வரை அனைவரின் இசையில் பாடல்கள் பாடிய இசை பேரரசி என்று பெயர் பெற்ற எஸ் ஜானகி காலமாகிவிட்டார் என்ற செய்தி திரையுலகினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

ஒய்ஜி மகேந்திரன்
ஒரு அபூர்வமான குயில் மவுனமானது. சிங்கார வேலனே என்று அவர் பாடியபோது உலகமே அவருடன் இணைந்து பாடியது; அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலிலும் உலகம் அவருடன் இணைந்தது. அவரது பாடல்களைப் பாடுவதை உலகம் ஒருபோதும் நிறுத்தவில்லை, இனி ஒருபோதும் அவரது புகழைப் பாடுவதை நிறுத்தப்போவதுமில்லை. 'கொஞ்சும் சலங்கை' காலத்திலிருந்தே அவரை எங்களுக்குத் தெரியும்; அன்பும் பாசமும் நிறைந்த மனிதராகத் திகழ்ந்த அவரது இயல்பு ஒருபோதும் மாறவில்லை. 'இசைஞானி' என்ன விரும்பினாரோ, அதை அவர் மிகச் சிறப்பாக வழங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக, திரை உலகம் இதுபோன்று பல ஜாம்பவான்களைத் தொடர்ந்து இழந்து வருகிறது. முரளியுடன் இணைந்து எங்கள் நாடகங்கள் அனைத்தையும் பார்வையிட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தது எனக்குக் கிடைத்த ஒரு சிறப்பான பாக்கியம். அவரது குழந்தையைப் போன்ற சிரிப்பு மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியது. அவர் தன் மகனை மிகவும் நேசித்தார்; ஆம், இப்போது அவரும் தன் மகனுடன் இணைந்துவிட்டார் ஜானகி அம்மா. நீங்கள் அவர்களுடன் இருப்பதற்குத் தேவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் சாந்தி. தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டும்.

சிம்பு
ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பல தலைமுறையினர் உங்கள் குரலைக் கேட்டு வளர்ந்துள்ளனர், இனி வரும் தலைமுறையினரும் அதைத் தொடர்ந்து போற்றிப் பாதுகாப்பார்கள். எங்கள் வாழ்வில் காலத்தால் அழியாத பாடல்களையும் மறக்க முடியாத உணர்வுகளையும் நிரப்பியதற்கு நன்றி. உங்கள் குரல் என்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாகவே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை நேசித்த, போற்றிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

அனிருத்
ஜானகி அம்மா, அமைதியாக துயில் கொள்ளுங்கள். உங்கள் ஆசீர்வாதங்களை என்றென்றும் நினைவுகூர்வேன். ஓம் சாந்தி.

சின்மயி
அவள் ஒரு கடவுள். 20-23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ஒரு பாடலை பாடினார். அந்த குரல் ஒரு குழந்தை போல், ஆண் குரல் போலவும் ஒலித்தது. நான் மேடைக்குப் பின்னால் இருந்தேன், அந்தப் பாடலை முழுவதுமாகப் பாடுவது அவர் தான் என்று தெரிந்துகொள்ளும் வரை, அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் அவரது பங்களிப்பு ஏராளம். நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி. ஒருவேளை அவர் முருகனுக்கு சிங்கர வேலனே தேவனாக இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !