யோகிபாபு 11 வேடங்களில் நடிக்கும் ஆக் ஷன், திரில்லர் படம்
ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா படம் காமெடி, ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகிறது. இதில் அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார். இதில் ஹீரோ, வில்லன், காமெடி உள்ளிட்ட 11 மாறுபட்ட வேடங்களில் யோகிபாபு நடிக்கிறார். இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குனர் ஆர்.கிஷோர் குமார் இயக்குகிறார்.
படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛பரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார்.
ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது, அதன் பிளாக் பாக்ஸை தேடும் பயணம் தான் இந்த திரைப்படத்தின் கதை. விபத்தின் காரணத்தை கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூற உள்ளோம். மலையாள நடிகை அதிதி ரவி ஹீரோயின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது என்கிறார்.