முதல்நாளே பாக்ஸ் ஆபீஸில் ‛டல்' அடித்த ஆலியா பட்டின் ஆல்பா
ஹிந்தியில் ஆலியா பட் கதையின் நாயகியாக நடித்து ஜூலை மூன்றாம் தேதியான நேற்று திரைக்கு வந்த படம் ஆல்பா. அதிரடியான ஆக் ஷன் கதையில் உருவான இந்த படத்தை சிவ் ரவைல் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் ஸ்பை யூனிவர்சின் முதல் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அதன் காரணமாக இந்த ஆல்பா படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. என்றாலும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நேற்று முதல் நாளில் இந்திய அளவில் இந்த ஆல்பா படம் 9 கோடி ரூபாய் வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. குறிப்பாக 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் முதல் நாளில் டபுள் டிஜிட்டில் கூட வசூலிக்காததுயஷ் ராஜ் பிலிம்சுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஆலியா பட் கூறுகையில், ‛‛என்னுடைய சினிமா கேரியரில் நான் ரசித்து நடித்த படங்களில் இந்த ஆல்பா முக்கியமானது . இந்த படத்தின் மூலம் ஆக் ஷன் உலகிற்குள் நுழைந்தது ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. இரண்டு பெண் கதாபாத்திரங்கள் ஒரு பிரமாண்ட ஆக்ஷன் கதையை எதிர்கொள்வது எப்போதாவது அரிதாகதான் நடக்கும். அந்த வகையில் இந்த படம் என்னை திருப்திப்படுத்தியது போன்று ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு அதிரடியான ஆக் ஷன் கொண்டாட்டமாக இருக்கும் என்று ஆலியா பட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்பா படத்தில் அனில் கபூர், பாபி தியோல், ஷார்வரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.