ஆர்யாவுக்கு அடுத்த அடி கொடுத்த 'அனந்தன் காடு'
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. கடந்த சில வருடங்களாக அவரும் தமிழ் சினிமாவில் வெற்றியைத் தேடிக் கொண்டிருக்கிறார். 2021ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திற்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தொடர்ந்து 'அரண்மனை 3, எனிமி, கேப்டன், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்,' ஆகிய படங்கள் அவருக்குத் தோல்வியாகத்தான் அமைந்தன. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த 'மிஸ்டர் எக்ஸ்' படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால், அந்தப் படமும் ஓடவில்லை.
கடந்த வாரம் அவர் மலையாளத்தில் நடித்த 'அனந்தன் காடு' படம் வெளிவந்தது. அந்தப் படமும் வசூலைப் பெற முடியாமல் தவித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இதற்குப் பிறகு 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படங்கள்தான் ஆர்யாவுக்கு ஆறுதலைத் தர வேண்டும்.