சுரேஷ் கோபி படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த தமன்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வரும் பிஸியான இசையமைப்பாளராக இருப்பவர் தமன். தமிழிலும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இன்னொரு பக்கம் கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த 17 வருடங்களில் மலையாளப் படங்களுக்கு இதுவரை இசையமைத்ததில்லை. தற்போது மலையாளத்திலும் நுழைந்துள்ள தமன், நடிகர் சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகி வரும் 'ஒத்தக் கொம்பன்' படத்திற்கு இசையமைக்கிறார்.
முதலில் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் தான் இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவர் மாற்றப்பட்டு தமன் இசையமைக்கிறார்.. இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. கொரோனா அலை, சுரேஷ் கோபியின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இப்போது தமன் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதன் மூலம், மீண்டும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளது என்றே தெரிகிறது. இந்த வருடத்திற்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.