தமிழக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா, சினிமா சங்கங்கள் தயார்? அவர் சம்மதிப்பாரா
தமிழக முதல்வராக சினிமாத் துறையை சேர்ந்த விஜய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் சினிமா துறை சம்பந்தப்பட்ட பாரதிராஜா மறைவு, பாக்யராஜ் மறைவு போன்ற துக்க நிகழ்வில் மட்டுமே பங்கேற்றுள்ளார். மற்ற சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த சினிமா சங்கங்கள், முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். இதை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக முதல்வரை சந்தித்து இதற்கு அனுமதி பெறும் வேளையில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சினிமா சங்கம் பாராட்டு விழா நடத்த முதல்வர் ஓகே சொல்வாரா? அல்லது மறுப்பாரா? அல்லது கொஞ்சநாள் போகட்டும் என தள்ளி வைப்பாரா என்பது முதல்வர் கையில் இருக்கிறது.
தமிழ் சினிமா தவிர, அந்த பாராட்டு விழாவில் தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகையும் அழைக்க தமிழ் சினிமாகாரர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம். மேலும் முதல்வருடன் பணியாற்றிய பல்வேறு மொழியை சேர்ந்த கலைஞர்களையும் அழைத்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதை பிரமாண்டமாக நடத்தவும் திட்டம் இருக்கிறதாம்.
இதற்குமுன்பு இப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா நுாற்றாண்டு விழாவுடன் இணைந்து பாராட்டு விழா நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டது இல்லை. இளையராஜா சிம்பொனி உள்ளிட்ட சில விழாக்களில் மட்டுமே பங்கேற்றார்.