எனது பயோபிக் படம் டிராப் : ஹாலிவுட் பாடகி மடோனா அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி மடோனா, 40 ஆண்டுகளுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வருகிறார். ஹாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவர் பாடும் காட்சிகளும் பல படங்களில் இடம்பெற்றுள்ளது.
இவரது வாழ்க்கை கதையை தயாரிக்க பலர் முன்வந்தபோது அதனை மறுத்துவிட்டார் மடோனா. சில வருடங்களுக்கு பிறகு தனது கதையை தானே படமாக இயக்க இருப்பதாக அறிவித்தார். “இசைக் கலைஞராக, நடனக் கலைஞராக, மனிதராக என் வாழ்க்கை என்னை அழைத்துச் சென்ற அற்புதமான பயணம் குறித்து சொல்ல விரும்புகிறேன். இந்தப் படம் இசையைப் பற்றியே இருக்கும். இசையும், கலையும் தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார். யுனிவர்சல் பிக்சர்ஸ் இதைத் தயாரிக்க இருந்தது.
இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக மடோனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது வாழ்க்கை படத்தை உருவாக்க 2 ஆண்டுகள் செலவிட்டேன்; நடிகர்களைத் தேர்வு செய்ய மேலும் 2 ஆண்டுகளைச் செலவிட்டேன். ஆனால், பட்ஜெட் விஷயத்தில் எனக்கும் யுனிவர்சல் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏனெனில், நான் வாழ்ந்தது அசாதாரணமான, பிரம்மாண்டமான வாழ்க்கை; எனவே அதற்குப் பெரிய அளவிலான பட்ஜெட் தேவைப்பட்டது. அவர்கள் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை இதனால் எனது பயோபிக் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஆனாலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. ஆனால் எனது வாழ்க்கை படத்தின் திரைக்கதை உரிமம் யுனிவர்செல் நிறுவனத்திடம் உள்ளது. அதற்கு அவர்கள் அதிக விலை சொல்கிறார்கள். இதனால் இந்த திட்டம் முழுமையாக கைவிடப்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.