முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டேன் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்துக்கும், முதல்வர் விஜய்க்கும் உறவு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதம் எழுகின்றன. சட்டசபை தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீடு தேடி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். ஆனால், இதுவரை முதல்வர் விஜயை நேரில் சந்திக்கவில்லை. நேரில் வாழ்த்து கூறவில்லை.
இது குறித்து இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் வர, சென்னை போயஸ்கார்டன் வீட்டில் மீடியாவை அழைத்து விளக்கம் சொன்னார். விஜய் முதல்வர் ஆனதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார். இந்நிலையில், முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் அவருக்கு சமூகவலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் ஒரு பதிவு கூட போடவில்லை. இது சர்ச்சை ஆனது. இன்னமும் ரஜினி கோபம் தீரவில்லை என்று விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில், இன்று காலை நடந்த தர்மன் படவிழாவில் ரஜினியிடம் முதல்வருக்கு வாழ்த்து தெரிக்காதது சர்ச்சை ஆகியிருக்கிறதே என்று நிருபர்கள் கேட்க, நான் பேசிட்டேன் என்று ரஜினி சிரித்தபடி சொல்லி, அந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார். ஆகவே, முதல்வரிடம் போனில் வாழ்த்து தெரிவித்து இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், முதல்வர் தரப்பில் போனில் வாழ்த்து தெரிவித்தவர் பட்டியலை மீடியாவிடம் கொடுப்பது பல ஆண்டுகால வழக்கம். ரஜினி வாழ்த்து தெரிவித்ததை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல், நடிகை திரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இன்ஸ்டாவில் அவர் அன்பாலோ செய்துவிட்டார் என தகவல் பரவிய நிலையில், முதல்வருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை வெளியிட்டு அவரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.