பார்ட் 2 ஆசை: 'கட்டா குஸ்தி 2'வில் நிறைவேறிய மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்
கடந்த 2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் ஹிட்டானது. இதனை தொடர்ந்து தற்போது இதே கூட்டணியில் இதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஜூலை 3ல் படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் செல்லா அய்யாவு, நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஷ்ணு விஷால் கூறியதாவது: எனக்கு பர்சனலாக நிறைய பார்ட் 2 மிஸ் ஆகிவிட்டது. 'இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், எப்ஐஆர்' ஆகிய படங்களுக்கான 2ம் பாகம் எடுக்க முடியவில்லை. அதனால், வாழ்க்கையில் ஒரு பார்ட் 2 படமாவது பண்ணிரலாம் என இயக்குனரிடம் 2ம் பாகம் எடுப்பது என்ற முடிவை தெரிவித்தேன். அதன்பின்னர் அரை மணிநேரம் ஆலோசித்து இந்த கதையை எடுக்க முடிவு செய்தோம். முதல் பாகத்தை விட குறைவானதாக இருக்கக்கூடாது என பண்ணினோம். அந்த படத்தில் இருந்த கலாட்டா, எமோஷன் அனைத்தும் இந்த படத்திலும் இருக்கிறது. இதில் நான் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக நடித்துள்ளேன். அந்த கேரக்டரை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை கூறியுள்ளோம்.
என் அப்பா மாடு மேய்த்து ஐ.பி.எஸ் ஆனவர். என் சகோதரி, பெரிய வங்கி ஒன்றில் வேலை செய்கிறார். அவர் தான் எங்கள் குடும்பத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றார். என் மனைவி விளையாட்டுத்துறையில் இருக்கிறார். அவருக்கு சப்போர்ட் பண்ணுகிற ரோல் தான் இந்த கட்டா குஸ்தி 2. அவர் இந்திய அளவில் விளையாட வேண்டும். மே 28ல் வெளியிட திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களால் தாமதமாகி ஜூலை 3ல் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டபுள் போனஸ்
தொடர்ந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி கூறுகையில், ''இந்த மாதிரியான ஒரு ரோல் கிடைக்க வேண்டும் என்றே பல நடிகைகளின் கனவாக இருக்கும். அதுபோன்ற ரோல் தான் கட்டா குஸ்தியில் எனக்கு கிடைத்தது. தற்போது டபுள் போனஸாக 2ம் பாகத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.