சினிமா ஹீரோயின் ஆன தர்ஷிகா
'பொன்னி' மற்றும் 'தாலாட்டு' தொடர்கள் மூலம் புகழ்பெற்றவர் தர்ஷிகா. 'பிக் பாஸ்' 8வது சீசன் மூலம் புகழ்பெற்றார். தற்போது அவர் 'டார்க் ஹெவன்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தென்காசி மாவட்டம் மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரில்லர் படம் இது. இந்த படத்தில் 'ராஜாராணி, திருமணம், பாரதி கண்ணம்மா' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த ஜித்து சித் நாயகனாக நடிக்கிறார்.
இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் பாலாஜி கூறியதாவது: மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.
ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையமாக கொண்டது இந்த படம்.
தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த படம்.