தணிக்கை சான்று பெற 'தக்கல்' முறை ரத்து
ரெயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கடைசி நாளில் கூடுதலாக பணம் செலுத்தி தக்கல் முறையில் டிக்கெட் வாங்குவார்கள். இதேபோன்ற தக்கல் முறை சினிமாவில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கும் இருந்தது. பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு கடைசி நேரத்தில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி தணிக்கை சான்றிதழ் பெற்று வந்தார்கள். இதனால் அதிக பணம் கட்ட முடியாத சிறு தயாரிப்பாளர்கள் தணிக்கை சான்றிதழுக்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டியது வந்தது.
தற்போது இந்த தக்கல் முறை ரத்து செய்யப்பட்டு, இனி பதிவு மூப்பு அடைப்படையில் மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தட்கல் முறை நீக்கப்பட்டிருப்பது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மிகச் சாதகமான, வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும். இதன் மூலம் சென்சார் போர்டு முன்னிலையில் அனைவரும் சமம் என்கிற ஆரோக்கியமான சூழல் மீண்டும் உருவாகி உள்ளது.