உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி”

பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி”


19ம் நூற்றாண்டின் இறுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய ஒரு நாடகக் காப்பியம்தான் “மனோன்மணீயம்”. லார்டு லிட்டன் என்ற ஆங்கிலப் புலவர் எழுதிய “தி சீக்ரெட் வே” (ரகசிய வழி) என்ற கதையைத் தழுவி பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய இந்த “மனோன்மணீயம்”, 1942ல் திரைவடிவம் பெற்று, “மனோன்மணி” என்ற பெயரில் வெள்ளித்திரையில் மின்னியது. வரலாற்றுத் தொடர்புடையது போலவும், தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போலவும் புனையப்பட்ட இந்தக் கற்பனைக் கதையை, திரைவடிவில் தந்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்திருந்தனர் “தி மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தினர்.

சேரநாட்டு மன்னன் புருஷோத்தமன் நேர்மையுள்ள மாவீரன். வெளுத்ததெல்லாம் பால் எனக் கருதும் பாண்டிய மன்னன் ஜீவகன். தன்னலமே குடிகொண்டிருக்கும் சூழ்ச்சிக்காரன் பாண்டிய மன்னனின் அமைச்சர் குடிலன். பாண்டிய நாட்டின் இளவரசி மனோன்மணி. இளவரசியின் கனவில் ஒரு ஆணழகன் தோன்றுகிறான் அவன் புருஷோத்தமன். புருஷோத்தமனின் கனவிலும் ஒரு பெண்ணழகி தோன்றுகின்றாள் அவள் மனோன்மணி. இவர்களைச் சுற்றிச் சுழலும் இந்தக் கதையில் வஞ்சகன் குடிலனின் சூழ்ச்சியிலிருந்து நாட்டையும், இளவரசியையும் எவ்வாறு காப்பாற்றுகின்றான் புருஷோத்தமன். கனவில் இணைந்த காதலர்கள் எவ்வாறு நிஜத்தில் கரம் பிடிக்கின்றனர் என்பதுதான் இந்த “மனோன்மணி” திரைப்படத்தின் கதை.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் கதைக்கு எம் எல் டாண்டன் திரைக்கதை அமைத்து, “தி மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியிருந்தவர் டி ஆர் சுந்தரம். அக்காலத்திலேயே இரண்டு லட்சம் ரூபாய் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கான நாயகன் மற்றும் நாயகி தேர்வினை பொதுமக்களே பரிந்துரை செய்யுமாறு, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி ஆர் சுந்தரம் பத்திரிகை விளம்பரம் செய்ய, பெரும்பான்மையினரின் தேர்வாக இருந்தவர்கள் நடிகர் பி யு சின்னப்பாவும், நடிகை டி ஆர் ராஜகுமாரி என இருந்ததால் அவர்களையே படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் டி ஆர் சுந்தரம்.

படத்தின் பாடல்களை பாபநாசம் ராஜகோபால அய்யர் எழுத, இசை வடிவம் தந்திருந்தவர் டி ஏ கல்யாணம். பின்னாளில் 'திரையிசைத் திலகம்' என தமிழ் திரையுலகமே கொண்டாடி மகிழ்ந்த கே வி மகாதேவன், டி ஏ கல்யாணத்துடன் இணைந்து இசைப்பணி ஆற்றியதால் கே வி மகாதேவனின் முதல் திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “மனோன்மணி”. படத்தில் நாயகியாக, பாண்டிய இளவரசி மனோன்மணியாக நடித்திருந்த டி ஆர் ராஜகுமாரியின் தோழியாக நடித்திருந்த நடிகை ஏ சகுந்தலாதான் படத்தின் நாயகனான பி யு சின்னப்பாவின் நிஜ வாழ்க்கைத் துணை. இத்தனைச் சிறப்புகளை உள்ளடக்கிய இத்திரைப்படத்தில் பி யு சின்னப்பா, டி ஆர் ராஜகுமாரி, செருகளத்தூர் சாமா, டி எஸ் பாலையா, டி ஆர் மகாலிங்கம், ஆர் பாலசுப்ரமணியம், ஏ சகுந்தலா, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், எஸ் எஸ் கொக்கோ, சி டி ராஜகாந்தம் என பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருந்தனர்.

நவம்பர் 7, 1942ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 175 நாள்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா கண்டதோடு, இப்படத்தின் நாயகியான டி ஆர் ராஜகுமாரி மற்றும் நடிகர் டி எஸ் பாலையா ஆகிய இருவரின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது. படம் வெளிவந்த பின்பு நடிகை டி ஆர் ராஜகுமாரி சினிமா பத்திரிகையாளர்களால் 'கனவுக் கன்னி' என்ற அடைமொழியிட்டும் குறிப்பிடத் தொடங்கியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !