அண்ணன் இளையராஜா பற்றி தவறான தகவல் பரப்பாதீர்கள் : தம்பி கங்கைஅமரன் ஆதங்கம்
சென்னையில் நடந்த ‛உயிரிணையே' என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் தனது அண்ணன் இளையராஜா பற்றி சில விஷயங்களை பேசினார் இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர் கங்கை அமரன். அவர் பேசியது...
டென்மார்க்கை சேர்ந்த கிளாடி ஜெராடு தயாரிக்க, பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்சனம் மகன் சதா சுதர்சனம் இசையமைத்த இந்த ஆல்பத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையோடு இந்த ஆல்பம் உருவாகி இருக்கிறது. அண்ணன் இசைஞானியின் வாசிப்பில் தான் நாங்கள் வளர்ந்திருக்கோம். தவிர, பல குருக்களுடன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. இந்த காலத்து குழந்தைகளுக்கு அது கிடைத்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடுவோம். இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்.
இசைத்துறையில் ஏஐ வந்துவிட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நாம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது. ஒரு தீமை ஏஐ கொடுத்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது. அதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது? வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.
என் அண்ணன் பற்றி அவ்வப்போது சில தவறான செய்தி, வீடியோ பரப்பப்படுகிறது. அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இவர் அவருடன் இல்லை என குடும்பம் குறித்து தவறாக பேசுகிறார்கள். அண்ணன் இளையராஜாவுடன் மூத்த மகன் கார்த்திக் ராஜா இருக்கிறார். இளைய மகன் யுவன் துபாயில் இருக்கிறார். அண்ணன் சிம்பொனி, கச்சேரி, சினிமா என பிஸியாக இருக்கிறார். அவரை பற்றி தவறான கருத்துகளை பரப்பாதீர்கள். அப்படி பரப்பிய ஒருவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மன்னிப்பு கேட்டார்''.
இவ்வாறு அவர் பேசினார்