வாக்குப்பதிவில் முறைகேடு; வீடியோ வெளியிட்டு டெலிட் செய்த ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அவரது திருமணத்திற்கு பிறகு முதலாவதாக வெளியாக இருக்கும் படம் ஹிந்தியில் அவர் நடித்துள்ள ‛காக்டெய்ல் 2'.. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். கதாநாயகனாக ஷாகித் கபூர் நடித்திருக்கிறார். வரும் ஜூன் 19ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பில் இந்த படத்தில் இருந்து கிர்த்தி சனோன் நடித்துள்ள ‛மஷூக்கா' மற்றும் ராஷ்மிகாவும் நடித்துள்ள ‛துஜ்கோ' என்கிற இரண்டு பாடல்களில் ஒரு பாடலை வெளியிட தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த இரண்டு பாடல்களில் எது முதலில் வெளியாக வேண்டும் என நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கிர்த்தி சனோன் பாடல் தேர்வானது.
இதனால் அதிருப்தி அடைந்த ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், மஷூக்கா பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த நிகழ்வில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது என்று நினைக்கிறேன். அங்கு வந்திருந்த மீடியா நண்பர்கள் பலரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்ததால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று அவர்களே என்னிடம் சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, அந்த படத்தில் தான் நடித்துள்ள துஜ்கோ பாடலின் ஒரு சிறிய வீடியோ காட்சியையும் லீக் செய்தார் ராஷ்மிகா மந்தனா. அதன்பிறகு தன்னை அறியாமல் வெளியிட்டு விட்டதாக ஐயோ என்று ஒரு கேப்ஷனை கொடுத்திருந்த அவர், கொஞ்ச நேரத்திலேயே அந்த வீடியோவை நீக்கி விட்டார்.. இது ராஷ்மிகா மந்தனா இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக செய்த புத்திசாலித்தனமான யுக்தி என்றே ரசிகர்கள் கூறுகின்றார்கள்.