உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் 'கருப்பு'. இப்படம் நேற்று மே 14ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி நேற்று வெளியாகவில்லை. முதலில் காலை 9 மணி சிறப்புக் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பகல் காட்சிகளும், அடுத்து இரவுக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடைசியாக தீர்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் படம் வெளியாகி உள்ளது.

இன்று காலையில் தயாரிப்பு நிறுவனம் இன்று படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர்களது எக்ஸ் தளத்தில் இது குறித்து,

“காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கும் சில பயணங்கள் உண்டு. 'கருப்பு' படத்திற்காகக் காத்திருந்த, படம் குறித்துத் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த, மவுனமும் தாமதங்களும் சூழ்ந்திருந்த காலத்திலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்த ஒவ்வொருவருக்கும் — நாங்கள் ஒரு மன்னிப்பையும், அதைவிட முக்கியமாக, எங்கள் ஆழ்ந்த நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.

இந்தக் காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தப் படத்தை மிகுந்த அன்போடும் எதிர்பார்ப்போடும் நெஞ்சில் சுமந்திருந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாகவே அழுத்தியது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்கள் ஆதரவும், உங்கள் செய்திகளும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்புமே இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.



இன்று, நிறைந்த இதயத்தோடும், நன்றிக் கண்ணீரோடும் நாங்கள் இறுதியாக அறிவிக்கிறோம், 'கருப்பு' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தில் எங்கள் ரத்தமும், வியர்வையும், உறக்கமற்ற இரவுகளும், போராட்டங்களும், உணர்வுகளும் கலந்திருக்கின்றன. இது இனி வெறும் எங்கள் கதை மட்டுமல்ல — இந்தப் பயணத்தில் எங்கள் துணையாக நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது.

காத்திருந்தமைக்கு நன்றி. நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்,” என்று அறிவித்துள்ளனர்.



சூர்யா நன்றி
எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. கருப்பு இன்று வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த திரிஷா



கருப்பு படத்தின் புரொமோஷன்களில் பெரிதாக கலந்து கொள்ளாத இப்பட நாயகியான திரிஷா இன்று படத்தை ரசிகர்களுடன் பார்த்தார். சென்னையில் நடந்த இப்படத்தின் காட்சியில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !