உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு

என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு


தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி முதல்வர் ஆகியுள்ளார் விஜய். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களையும் நேரில் சந்தித்துள்ளார். ஆனால், சினிமா துறையில் பிரபலமான ரஜினியை அவர் சந்திக்கவில்லை. ரஜினியும் அதற்கு இடம் கொடுக்காமல் பெங்களூரு பறந்துவிட்டார். ஒரு சிலர் அவர் விஜய் சந்திப்பை தவிர்க்கவே வெளியூர் சென்றார் என்கிறார்கள்.

அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து டில்லி செல்லப்போகிறார், சில அரசியல் வேலைகளை செய்யப்போகிறார் என்றும் பேச்சு வந்தது. இன்னொரு தரப்போ அவர் வழக்கம்போல் இமயமலைக்கு செல்லப்போகிறார். அங்கே சில நாட்கள் ஓய்வெடுக்கப்போகிறார் என்றார்கள். ரஜினியோ பெங்களூருவில் வாழும் கலை ஆசிரமம் நடத்திய நிகழ்ச்சியில் நல்லதொரு சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். அதில் முக்கியமாக அவர் பேசியது ''மனிதவாழ்வு மகத்தானது. அதை வீணாக்காதீர்கள்'' என்று பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், ''வாழும் கலையை துவங்கி 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் முடிந்தால் கலந்து கொள்ளுங்கள் என்றார் குருஜி. உங்களுக்கு மே 12 அல்லது 13ம் தேதி ஷூட்டிங் இல்லை என்றால் வாங்க என்று குருஜி தெரிவித்தார். நான் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தேன். 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு சென்றதால் கன்னடத்தில் பேச வாய்ப்பு இல்லை. பேச வராது. அதே சமயம் மறக்கவில்லை.

நான் முதல் முறையாக இந்த ஆசிரமத்திற்கு வந்தபோது அதன் அழகை பார்த்து அசந்தேன். இங்கிருக்கும் அனைவரின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம். இங்கு இரண்டு குதிரைகள் இருக்கிறது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி. இரண்டு நாட்கள் தங்கலாம் என்று வந்து 15 நாட்கள் இருந்தேன். ஒரு நாள் மாலை குருஜி வந்து இன்று நல்ல நாள் அதனால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருக்கிறார்கள். நான் அவர்களை சந்திக்கப் போகிறேன், நீங்களும் என்னுடன் வாங்க என்றார். நான் வந்தால் அது தொந்தரவாக இருக்கும் என்று மறுக்க, அதெல்லாம் வராது, நீங்க வாங்க என அவர் அழைத்தார்.

அவருடன் செல்லும்போது என்னை பார்த்தால் எல்லோரும் ரஜினி, ரஜினி என்று கோஷமிடுவார்கள், ஆட்டோகிராப் கேட்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நடந்தது வேறு. நானும், குருதேவும் ஒரு இடத்தில் அமர அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றார்கள். ஆனால் ஒருத்தர் கூட என்னை பார்க்கவில்லை.

போட்டோ, ஆட்டோகிராபை விடுங்க. நான் பலரை பார்த்து ஹாய்னு கையை காட்டியும் யாரும் என்னை கண்டுக்கவே இல்லை. இது என் ஈகோவை நொறுக்கிவிட்டது. உங்களுக்கு தொந்தரவு வரவில்லையே என்று குருஜி கேட்டார். அதுதான் ஆன்மிகத்தின் பவர். ஸ்டார்டம் (புகழ்ச்சி) வரும், போகும் ஆனால் ஆன்மிக ஸ்டார்டம் தான் உயர்ந்தது. அவர்கள் இறந்தாலும் கூட ஸ்டார்டம் அப்படியே இருக்கும், சொல்லப் போனால் அதிகரிக்கும். நல்ல குரு கிடைப்பது கஷ்டம். எனக்கு அருமையான குருவாக ஸ்ரீ ஸ்ரீ கிடைத்திருக்கிறார்'' என்று பேசியுள்ளார் ரஜினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !