உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார்

ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார்


கடந்த வருடம் மலையாளத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றார். கடந்த சில வருடங்களாகவே 'மீ டூ' பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய சமயத்தில், அப்போதைய நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில்தான் மறுதேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அப்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பல நிர்வாகிகள் தோல்வியைத் தழுவினார்கள்; பலர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

தனது தலைமையிலான புதிய நிர்வாகம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருக்கும் என நம்பிக்கையை அளித்தார் ஸ்வேதா மேனன். இந்த நிலையில் இவரது நிர்வாகத்தில் முதன்முறையாக நடிகர் சங்கத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலக மேலாளரான அதுல்யா என்பவர், சங்கத்தின் பொருளாளர் உன்னி சிவபால் மற்றும் பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக எர்ணாகுளம் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் அவர் கூறும்போது, காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் என்றாலும் கூட, நள்ளிரவு வரை வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும்; குறிப்பாகப் பொருளாளர் மாலை 5 மணிக்குமேல் தான் அலுவலகம் வருவதால் அவர் இருக்கும் வரை தாமதமாக இருக்க வேண்டி இருந்தது என்றும், விடுமுறை நாட்களில் கூட வேலை சம்பந்தமாக அழைப்புகள் வந்ததாகவும் அதுல்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சங்கத்தில் உள்ள சிலர் ஒரு லட்சம் ரூபாய் தவறாகப் பரிமாற்றம் செய்வதற்கு முயன்றதாகவும், சங்கத்தில் நடக்கும் சில தவறுகளை தட்டிக் கேட்டதற்காகத் தனது வேலை திருப்திகரமாக இல்லை எனக் கூறி ஏப்ரல் 30 அன்று தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சங்கத்தின் பொதுச் செயலாளர் குக்கு பரமேஸ்வரன் இது குறித்துக் கூறும்போது, அதுல்யா தற்போது ஒரு பயிற்சிப் பருவத்தில் இருந்த ஊழியர்தான் என்றும், அவரது பணி திருப்திகரமாக இல்லாததால் மட்டுமே அவர் நீக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதுல்யா அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் முதற்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !