சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்?
தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அதிகம்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜிகணேசன், டி ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் என வந்து கடைசியாக விஜய் வரை தற்போது வந்துள்ளது. இவர்களில் சிலருக்கு மட்டும்தான் மக்கள் முதல்வர் பதவி என்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட விஜய், நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்களான வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரை சந்தித்தார். அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதாக உள்ளது என பலரும் விமர்சனம் செய்தார்கள். நாகரீக அரசியல் மீண்டும் தொடர்ந்தால் நல்லது என்பதும் பலரது கருத்தாக இருந்தது.
அரசியலில் எதிர்த்து போட்டியிட்டவர்களை சந்தித்த விஜய், சினிமாவில் தனக்கு திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. அவர் பதவியேற்ற விழாவிற்குக் கூட திரையுலக சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றே சொன்னார்கள். அவருக்கு நெருக்கமான சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டார்கள்.
விஜய்க்கு சினிமாவில் பெரும் திருப்பத்தைக் கொடுத்த படங்கள், இயக்குனர்கள் என சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த விதத்தில் முதலாவதாக அவருக்குத் திருப்புமுனை தந்த படம் 'பூவே உனக்காக'. அந்தப் படம் வருவதற்கு முன்பு வரை விஜய் சாதாரண ஒரு நடிகராகவே இருந்தார். குறிப்பாக பி அன்ட் சி ரசிகர்கள் மட்டுமே அவரை ரசித்து வந்தார்கள்.
விக்ரமன் இயக்கத்தில் 1996ல் வந்த 'பூவே உனக்காக' படம்தான் விஜய்யை குடும்பத்து சினிமா ரசிகர்களையும், பெண்களையும் தியேட்டர்களுக்கு அதிக அளவில் வரவழைத்தது. அதன்பிறகே அவரது படங்களை அனைத்து ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அதற்கடுத்து 1997ல் வெளிவந்த பாசில் இயக்கிய 'காதலுக்கு மரியாதை' படம் அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரித்தது. ஒரு மென்மையான அனைவருக்கும் பிடித்தமான ஒரு சகோதரராக படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் விஜய்.
அதே போல அவரை மீண்டும் மனதிற்கு நெருக்கமாக ரசிக்க வைத்த படம் 'துள்ளாத மனமும் துள்ளும்', எழில் இயக்கத்தில் 1999ல் வந்த அந்தப் படம் வெள்ளிவிழா கண்ட ஒரு படம். விஜய்யின் கதாபாத்திரம் மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி அவரை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
2000ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த 'குஷி' படம் அப்போதைய இளைஞர்களை மட்டும் ரசிக்கவில்லை. அந்த ஆண்டிலும் அதற்குப் பிறகு பிறந்து இன்று இளைஞர்களாக இருக்கும் விஜய்க்கு வாக்களித்த பலரையும் இப்போதும் ரசிக்க வைக்கும் ஒரு படம்.
காதல் படங்கள், காதல் நாயகன், இளைய தளபதி என்று இருந்த விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி அவருக்கு பெரும் வெற்றியைத் தந்த படம் 2003ல் வெளிவந்த 'திருமலை'. ரமணா இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் மாஸ் ஹீரோவாக விஜய்யை முதலில் முன்னிறுத்தியது. அதன்பிறகே அவருக்கு ஆக்ஷன் கதைகளும் பொருத்தமாக இருக்கும் என பல இயக்குனரை அவர் பக்கம் திரும்ப வைத்தது.
அப்படியான ஆக்ஷன் படம்க அடுத்த வருடமே 2004ல் வெளிவந்த 'கில்லி' படம் ரீமேக் படம் என்றாலும் ஒரு நேரடிப் படம் போல விஜய்யை இன்னும் கொஞ்சம் உச்சத்திற்கு ஏற்றியது. இப்போதும டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் ஒரு படமாக அப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
மாஸ் ஹீரோ என்பதை இன்னும் கூடுதலான உச்சத்திற்கு ஏற்றிய படம் 2007ல் வந்த 'போக்கிரி' இதுவும் ரீமேக் படம்தான் என்றாலும் படத்தை இயக்கிய நடிகர் பிரபுதேவா விஜய்யின் ஆக்ஷனை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றார். 'பொறி பறக்க' வைத்த ஆக்ஷன் காட்சிகள் அதை செய்து காட்டின.
ஒரு கிளாஸ் ஆக்ஷன் ஹீரோவாக விஜய்யை மாற்றிய படம் 2012ல் வெளிவந்த 'துப்பாக்கி'. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த அப்படம் ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் படத்திற்குப் பிறக வழக்கமான மசாலா ஆக்ஷன் படங்களை விட வேறு ஒரு பரிமாணத்தில் அவரது படங்களை பயணிக்க வைக்கக் காரணமாக இருந்தது.
அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் வந்த 'தெறி, மெர்சல், பிகில்' படங்கள் அவருக்கான கமர்ஷியல் வெற்றியை இன்னும் அதிகப்படுத்தியது. இடையில் வந்த 'சர்க்கார்' படம் விஜய்யின் அரசியல் படமாக அமைந்தது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018ல் வந்த அப்படம் விஜய்யின் இன்றைய அரசியல் பயணத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
மேலே குறிப்பிட்ட படங்களும், அப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விஜய்யின் திரையுலக ஏற்றத்திற்கு முக்கிய காரணமானவர்கள். அரசியலில் இன்று இவ்வளவு தூரம் வந்து இரண்டே வருடங்களில் அவர் ஆட்சியைப் பிடிப்பதற்கு அடித்தளம் போட்டவர்கள் என்றால் மிகையில்லை. அவர்களது படங்கள்தான் அவருக்கு வாக்களித்த ரசிகர்களை உருவாகக் காரணமாக இருந்தது.
அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வாழ்த்துகளைப் பெறுவாரா முதல்வர் விஜய் என்ற கேள்விகளும் எழுகிறது. அரசியல் எதிரிகளை சந்தித்தவர் சினிமா நண்பர்களை சந்திக்க மாட்டாரா?