சினிமாவில் 25வது ஆண்டில் நுழையப் போகும் தனுஷ்
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், என தனது எல்லைகளை விரித்து நடிப்பவர் தமிழ் நடிகரான தனுஷ். அவருடைய திரையுலக வாழ்க்கையில் 25வது வருடத்தில் நுழைய உள்ளார்.
அவர் கதாநாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படம் 2002ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி வெளியானது. அவர் அறிமுகமான முதல் படமே இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியானபோது அவருடைய தோற்றம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்திய சினிமாவில் அவருக்கென ஒரு தனி இடத்தில் வந்து நிற்கிறார்.
தமிழில் “காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப் பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், மயக்கம் என்ன, 3, வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, கொடி, வட சென்னை, அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ராயன்,” என அவருடைய பல படங்களை அவருடைய இயல்பான மாறுபட்ட நடிப்புக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் படங்கள் மட்டுமல்லாது மேலும் சில படங்கள் சரியான வரவேற்பு, வசூல் பெறவில்லை என்றாலும் அந்தப் படங்களில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.
தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியில், “ராஞ்ஜனா, ஷமிதாப், அத்ராங்கி ரே, தேரே இஷ்க் மே' படங்களிலும், ஆங்கிலத்தில், 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப்த பகிர், தி கிரே மேன்' ஆகியவற்றிலும், தெலுங்கில் 'சார், குபேரா' ஆகிய மற்ற மொழிப் படங்கள் மூலமும் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர்.
நடிகராக, தயாரிப்பாளராக 4 தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். சிறந்த நடிகருக்காக 'ஆடுகளம்' மற்றும் 'அசுரன்' படங்களுக்காகவும், சிறந்த படங்களுக்காக 'காக்கா முட்டை, விசாரணை' படங்களுக்காகவும் தேசிய விருதை வென்றுள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாது 'ப பாண்டி, ராயன், இட்லி கடை' ஆகிய படங்களை இயக்கியும் இருக்கிறார். இயக்க மட்டுமல்லாது சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
குறிப்பாக இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனுஷ் தயாரித்த 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டவர். “காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை' உள்ளிட்ட சில படங்களை இணைந்தும் தயாரித்துள்ளார்.
நம்மில் ஒருவர் என்ற அவரது தோற்றம்தான் அவரை அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்து இன்று வரை அவரை ஒரு வெற்றிகரமான நாயகனாக, சினிமா கலைஞராக நிலை நிறுத்தி இருக்கிறது. 25 வருடங்களைத் தொடுவது, அதுவும் பன்முகத் திறமையுடன் என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இன்னும் பல வருடங்களை அவர் திரையுலகில் வளரட்டும் என வாழ்த்துவோம்.