பிளாஷ்பேக்: நட்புக்காக கார்த்திக் நடித்த படம்
கார்த்திக் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் நடித்த சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் டி.பி.கஜேந்திரன். எல்லோரும் உருவகேலி செய்து அவரை தள்ளி வைத்து பார்த்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் கார்த்திக். தனது அறையிலேயே அவரை தங்க வைத்துக் கொள்வார். அவர் இல்லாமல் கார்த்திக் சாப்பிட மாட்டார். அந்த அளவிற்கான நட்பு இருவருக்கும் இருந்தது.
டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'எங்க ஊரு காவக்காரன்' வெற்றிக்கு பிறகு அந்த படத்தை தயாரித்த சங்கிலி முருகன் அடுத்த படத்தையும் டி.பி.கஜேந்திரனை இயக்கச் சொன்னார். அந்த படம்தான் 'பாண்டி நாட்டு தங்கம்'. இந்த படத்தில் காட்டிலாகா அதிகாரிதான் நாயகன், இதில் நடிக்க கேட்டு கார்திக்கை அணுகினார். 'நீ ஒரு சக்சஸ்புல் டைரக்டர், கதையெல்லாம் கேட்க மாட்டேன். எப்போ, எங்கே சூட்டிங்னு சொல்லு வர்றேன்'என்று கூறிவிட்டார். 'அக்னி நட்சத்திரம்' படத்தில் நடித்த கார்த்திக்கிற்கும், நிரோஷாவுக்கும் சின்ன காதல் ஒடிக் கொண்டிருந்ததால் அவரையே நாயகி ஆக்கினார்.
மதுரை பக்கம் உள்ள மலையோர கிராமம் வேம்பள்ளி. ஏழை மக்கள் விறகு வெட்டி பிழைக்க, அந்த ஊரு முன்சீப் மற்றும் நாட்டாமை செந்தாமரை சந்தன மரத்தை வெட்டி கடத்தி பெரும் பணக்காரராக இருக்கிறார். அவருடன் இணைந்து கொண்டு உள்ளூர் ரவுடியாக திரிகிறார் அவரது தம்பி மகன் செல்லத்துரை (பப்லு பிருத்விராஜ்). அந்த ஊருக்கு வரும் காட்டிலாக அதிகாரிகளை தன் கைக்குள் போட்டுக் கொண்டு தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டிருப்பார் செந்தாமரை.
அந்த ஊருக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் தங்க பாண்டியன் (கார்த்திக்). நேர்மையான அதிகாரியான அவர் விறகு பொறுக்கச் செல்லும் பெண்களுக்கு, அரசின் அனுமதி அட்டை வாங்கித் தருகிறார். அதோடு சந்தன மரம் கடத்தும் செந்தாமரையின் ராஜ்யத்தை வீழ்த்த நினைக்கிறார். இதனால் செந்தாமரையின் லஞ்சம், ஆசை வார்த்தைகள் அனைத்தையும் புறக்கணித்து விடுகிறார்.
விறகு பொறுக்க செல்லும் ராதா (நிரோஷா) மீது கார்த்திக்கு காதல். ராதாவை வில்லனுக்கும் காதல். தனக்கு கிடைக்காத ராதா தங்க பாண்டியனுக்கும் கிடைக்க கூடாது என்று அவளை நடுக்காட்டில் கட்டி வைத்து எரிக்க முயற்சிக்கிறான். அதிலிருந்து தங்கபாண்டியன், ராதாவை காப்பாற்றி, பாண்டி நாட்டு தங்கமாக மாறி கரம் பிடிப்பதுதான் கதை.
கிளைமாக்ஸ் நெருப்பு காட்சியில் கார்த்திக் நடிக்க தயங்கினார். இதுபோன்ற ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பதை கார்த்திக் எப்போதும் விரும்புவதில்லை. என்றாலும் நண்பனுக்காக நடித்தார். படத்தில அது ஹெலைட்டான காட்சிகளாக அமைந்தது. படமும் பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தின் மெயின் ஹீரோ இளையராஜாதான். இளையராஜாவின் டாப் 50 பாடல்களின் பட்டியலில் பாண்டி நாட்டு தங்கம் படத்தின் அனைத்து பாடல்களும் இருக்கும், சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை... உன் மனசுல பாட்டுதான் இருக்குது என் மனசதை கேட்டுதான் தவிக்குது... பாண்டி நாட்டு தங்கம்.... ஏலேலம் குயிலே ஏலமலை வெயிலே.... மயிலாடும் பாறையில நாங்க ஆடிருப்போம்... பாடல்கள் இடம்பெற்றது இந்த படத்தில்தான்.