'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் லீக்: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் காட்சிகள் திடீரென இணையதளத்தில் கசிந்தது. இது விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, படத்தை தயாரித்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் தரப்பில் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி:
விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைத்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரித்திருந்தார். இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரன்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும். இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக தயாரிப்பு தரப்பு ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.