மிருணாள் தாக்கூருக்காக வித்தியாசமான கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கும் அனுராக் காஷ்யப்
பாலிவுட் நடிகையான மிருணாள் தாக்கூர் மராத்தியில் அறிமுகமானாலும் ஹிந்தி படங்களில் நடித்து ஓரளவு பிரபலமானார். கடந்த 2022ல் தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என இரண்டிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மிருணாள் தாக்கூர்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், மிருணாள் தாக்கூரின் நடிப்பு திறமை பற்றி சிலாகித்துக் கூறியுள்ளதுடன் அவருக்கென ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தையும் தனது வடிவமைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மிருணாள் தாக்கூர் உண்மையிலேயே தன்னை மிக குறைவாக மதிப்பிட்டுக் கொள்கிறார். அவருக்கு, தான் எவ்வளவு சிறந்த ஒரு நடிகை என்பது தெரியவில்லை. உண்மையிலேயே அவர் நல்ல நடிகை. பல பேர் கைகளால் நடிப்பார்கள். இன்னும் சிலர் தங்களது கண்களால் நடிப்பார்கள். ஆனால் மிருணாள் தாக்கூர் மனதில் உணர்வுகளை உள்வாங்கி அவற்றை கண்களுக்கு மொழிபெயர்த்து கடத்தக்கூடியவர். அவர் நடித்த எந்த ஒரு காட்சியையும் ஒரு பிரேமாக கட் பண்ணி பார்த்தால் இதை புரிந்து கொள்ள முடியும்.
என்னுடைய படம் ஒன்றுக்காக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை மிருணாள் தாக்கூருக்காகவே உருவாக்கி இருக்கிறேன். இது வழக்கமான அவரது இமேஜிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இருக்கும். குறிப்பாக ஒருவேளை மிருணாள் தாக்கூருக்கு யாரையாவது படத்தில் திட்டி நடிக்க வேண்டிய ஆசை நீண்ட நாளாக மனதில் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை என்னுடைய படத்தில் செய்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.