
புதுடில்லி அருணா அசப் அலி சாலையில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
பண்டாசுரன் என்ற அசுரன் தவம் செய்து அனைவரையும் வெல்லும் வரத்தை பெற்றான். இருந்தாலும் ஒன்பது வயது பெண் குழந்தையால்தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனை அவனுக்கு விதிக்கப்பட்டது. இந்த வரத்தின் பலத்தால் தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியிடம் சரணடைந்தனர். அவள் ஒன்பது வயது குழந்தையாக மாறி அசுரனை வதம் செய்தாள். அவளே காமாட்சி அம்மன் என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். காஞ்சி காமகோடி பீடத்தின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கோயிலின் ஒவ்வொரு கும்பாபிஷேகமும் காஞ்சி ஆச்சார்யார்கள் முன்னிலையில் நடக்கிறது.
காமாட்சி அம்மன் கையில் கரும்பு வில், மலர் அம்பு இருக்கும். ஏன் இதை வைத்திருக்கிறாள் என்பதை காஞ்சி மஹாபெரியவரே சொல்லியுள்ளார். மன்மதனிடம்தான் கரும்பு வில்லும், மலர் அம்பும் இருக்கும். இந்த வில்லையும், அம்பையும் வைத்துக் கொண்டே உயிர்களிடம் ஆசையை துாண்டி விடுகிறான். ஆனால் என் பக்தர்களிடமும் உன் கை வரிசையை காட்ட முடியாது என அவனிடம் இருந்து அவற்றை வாங்கி வைத்துக் கொண்டாள் காமாட்சி. இதன் மூலம் தன்னை நம்பிச் சரணடையும் பக்தர்களின் மனதை பலப்படுத்துகிறாள். அவர்களை குழந்தைகளாக எண்ணி வேண்டிய வரங்களைத் தருகிறாள்.
காமாட்சி அம்மன் சன்னதிக்கு இடது புறத்தில் கணபதி, வலதுபுறத்தில் ஆதிசங்கரரை தரிசிக்கலாம். வெள்ளியன்று மேரு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆதிசங்கரர், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி நாளில் ருத்ராபிஷேகம், பாதுகை பூஜை நடக்கிறது.
எப்படி செல்வது: முனிர்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: சங்கடஹர, விநாயகர் சதுர்த்தி, பவுர்ணமி பூஜை.
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 011 - 4180 2507
அருகிலுள்ள கோயில்: பெர் சாராய் வைகுண்டநாதர் (பதவி உயர்வுக்கு...)
நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 98116 57677