ADDED : ஜூலை 16, 2026 10:46 AM

'என்னை விட சிறந்த பக்தர் யார்?” என இறுமாப்பு கொண்டான் அர்ஜூனன். இதையறிந்த கண்ணன்,
''அர்ஜூனா... அஸ்தினாபுரத்தில் பிங்கலை என்ற பாட்டி இருக்கிறாள். அவளை சந்திக்கலாம் வா'' என்றான்.
''உண்மையான தோற்றத்தில் அங்கு சென்றால், நம் உயிருக்கு ஆபத்து நேரலாம். அதனால் பெண்ணாக மாறிச் செல்வோம்'' என சொல்ல அப்படியே புறப்பட்டனர்.
பிங்கலையிடம்,''பாட்டி... நாங்கள் பக்கத்து ஊர் தான். நீண்ட துாரம் நடந்ததால் களைப்பாகி விட்டது. சற்று இங்கு இளைப்பாறலாமா'' என்றான் கண்ணன்.
''தாராளமாக ஓய்வெடுங்கள். நானும் பூஜையை முடித்து வருகிறேன்'' என்றாள் பிங்கலை. அங்கு ஒரு பீடத்தில் கண்ணன் சிலையும், மூன்று கத்திகளும் இருந்தன.
''பாட்டி... சுவாமி சிலையோடு, கத்திகள் இருக்கிறதே ஏன்” எனக் கேட்டான் கண்ணன்.
''உண்மை தான். என் கண்ணனுக்கு தீங்கு செய்த எதிரிகளை கொல்வதற்காக தான்''
''எதிரிகள் யார் பாட்டி?”
''குசேலன், பாஞ்சாலி, அர்ஜூனன். இதில் குசேலனைக் கொல்ல இதோ இந்த சின்னக்கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரம். அர்ஜூனனை கொல்ல பெரிய கத்தி''என்றாள்.
அர்ஜூனன் திகைத்தான்.
''கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் பாட்டி” என்றான் அர்ஜூனன்.
''வெண்ணெய் விரும்பும் கண்ணனுக்கு, அவல் தரலாமா இந்த குசேலன்? அவனது தாமரை இதழ் அல்லவா நோகும்''
பாஞ்சாலி எப்படி உங்களுக்கு எதிரியானாள்?” என்றான் அர்ஜூனன்.
''திரவுபதியின் சேலையை இழுத்த துச்சாதனனுக்கு கைகள் நோகும்போது, அதை வழங்கிய கண்ணனுக்கு மட்டும் கை நோகாதா என்ன? அவளையும் விட மாட்டேன்”
''பக்தியில் சிறந்த அர்ஜூனன் மீது கோபம் ஏன்” என்றான் கண்ணன்.
''நீ தான் அவனை மெச்ச வேண்டும். உண்மையான பக்தன், சுவாமியின் கை வலிக்க தேரோட்டச் செய்வானா''
கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.
''பாட்டி... ஏழை குசேலனிடம் அவல் தவிர வேறு ஏதுமில்லை. அவனை மன்னியுங்கள்'' என்றான் கண்ணன். யோசித்த பிங்கலை, பீடத்திலிருந்த சிறிய கத்தியை எறிந்தாள்.
கண்ணன் தொடர்ந்தான்.
''பாஞ்சாலியை மன்னியுங்கள். சேலை கொடுத்ததால் கண்ணனுக்கு கைகள் வலித்தது உண்மையே என்றாலும் பெண்ணுக்கு மானம் பெரிதல்லவா? விட்டுக் கொடுங்கள்” என்றார்.
இரண்டாவது கத்தியை வீசினாள் பாட்டி. ''போரில் வெல்ல வேண்டும் என்ற சுயநலத்தால் தேரோட்டச் செய்த அர்ஜூனனை மன்னிக்க மாட்டேன். அதனால், பெரிய கத்தி இங்கு இருக்கட்டும்!” என்றாள் பிங்கலை.
''ஒப்புக்கொள்கிறேன்'' என்று கண்ணனும் தலையசைத்தான். அர்ஜூனனுக்கு தலை சுற்றியது. அப்போது கண்ணன் சற்று உரத்த குரலில், ''பாட்டி நான் சொல்வதை கேளுங்கள். அர்ஜூனனைக் கொன்றால், தன் அன்பு நண்பனை இழந்த கண்ணன் மனம் வருந்துமே”
''இந்த கோணத்தில் சிந்திக்கவில்லையே. கண்ணன் வருந்தும்படி நடக்க மாட்டேன்'' என மூன்றாவது கத்தியையும் பாட்டி வீசினாள்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே என வாழும் பாட்டியைக் கண்ட அர்ஜூனனின் கர்வம் மறைந்தது.
