sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 37

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 37

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 37

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 37


ADDED : மார் 14, 2025 08:56 AM

Google News

ADDED : மார் 14, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பச்சைமலையும் பவளமலையும்

'பச்சைமலை பவளமலை எங்கள் மலை அம்மே' எனும் குற்றாலக் குறவஞ்சிப் பாடலை பாடிக் கொண்டிருந்தார் பாட்டி.

“ பாட்டி... இது திரிகூட ராசப்ப கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி பாடல் தானே”

''இந்த ரெண்டு மலையும் கோபி செட்டிபாளையத்தில் பக்கத்து பக்கத்துல தான் இருக்கு. இதை ஒரே நாளிலேயே தரிசிக்கலாம். மலை மீது இருக்கிறதுனால சுற்றுலா தலங்களாவும் இருக்கு”

''சரி சரி, நீ பச்சைமலை ஏற தயாராயிட்ட, எங்களையும் கூட்டிட்டு போ பாட்டி” என மலை ஏறுவது போல பாவனை செய்தான் யுகன்.

“நிச்சயமா நீ இல்லாமலா யுகா... ஈரோடு மாவட்டம் கேள்விப்பட்டிருக்கியா?”

“ஏன் இல்லாம... துணிமணி, படுக்கை விரிப்புக்கு பெயர் பெற்றதாச்சே ஈரோடு”

“அதேதான். கோபி செட்டிபாளையத்தில் இருந்து இரண்டு கி.மீ., துாரத்தில் இருக்கிறது தான் பச்சைமலை. கோயம்புத்துாரில் இருந்து 85 கி.மீ., துாரம். இங்குள்ள முருகனை வேண்டினால் அவன் நமக்கு பன்னிரு கைகளாலும் அருளை வாரி வழங்குவான்”

“பச்சைமலை என்பது கண்ணுக்கு பசுமையா இருப்பதால் வந்த பேரா பாட்டி?”

“இல்லை யுகா. இங்குள்ள நீரூற்றை குறிக்குது. இந்த பச்சை மலை வெறும் பாறைகளும் கற்களும் நிறைந்த சின்ன குன்று. 180 படிகள் தான் இருக்கும். மலையை சுத்தி பஞ்சம் வந்த போதும் மலையை தோண்டிய போது நீர் வந்ததால பச்சை மலைன்னு அழைக்கப்பட்டது. இங்க மலையில மூலவருக்கு நேர் கீழாக வற்றாத நீரூற்று இருக்கு”

“அப்படியா இந்தக் கோயிலோட வரலாறு என்ன?”

“புராண காலத்தில துர்வாசர் கொங்கு நாட்டுக்கு வந்தார். சிவபூஜை செய்வதற்கு கோபிக்கு அருகிலுள்ள மொடச்சூரை தேர்ந்தெடுத்தார். தவ வலிமையால் பூஜை பொருட்களை வரவழைத்தார். மழையை பெய்யச் செய்து சிவபூஜையை செய்தார். ஆனாலும் அவரது மனம் முருகனை காண ஏங்கியது. அதற்காக தவம் செய்த போது 'முனிவரே... உம் பூஜையால் மகிழ்ந்தோம், எங்கள் இளைய குமாரன் அருகிலுள்ள பச்சைமலையில் இருக்கிறான். அங்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள முருகனை வழிபட்டு உம் பெயரால் சக்கரம் நிறுவுவாயாக' என அசரீரி ஒலித்தது. துர்வாசர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

உடனே அங்கிருந்து பச்சை மலைக்குப் போய் அங்கே குழந்தை வடிவில் முருகன் இருப்பதை கண்டு மகிழ்ந்து மானசீகமாக பூஜை செய்தார். மனம் இரங்கிய முருகன் நாக வடிவில் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' எனக் கேட்டார். அதற்கு முனிவர் 'இந்த குன்றிலேயே இளம் குமரனாக இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும். நான் அமைத்த இந்த சக்கரம் பிரகாசமாக இருக்க வேண்டும். சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த மலையில் அருள் தர வேண்டும்' என வேண்டினார். அவ்வாறே ஆகட்டும் என சுவாமி வரம் கொடுத்தார். கலியுகத்தில் என்னை நாடி வருவோரின் குறைகளை தீர்த்தருள்வோம்'' எனச் சொல்லி நாகம் மறைந்தது”

“சரி அந்த நாகம் சிவன் சொரூபமா முருகன் சொரூபமா?” எனக் கேட்டான் யுகன்.

“அது கடவுளின் சொரூபம்' என்று சொல்லி கோயில் வரலாறை தொடங்கினார். “தினமும் ஏழு கால பூஜை கொண்ட இக்கோயிலில் முருகனுக்குரிய விழாக்கள் சிறப்பாக நடக்கும். பச்சைமலை அடிவாரத்தில் பாத விநாயகர் கோயில் இருக்கு.

எந்த விழாவானாலும் முதல் பூஜை இவருக்குத் தான். அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள பாத விநாயகருக்கு தீபம் ஏற்றி, 108 முறை வலம் வந்தால் விருப்பம் நிறைவேறும். வினை தீரும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், பின்னர் மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரைக்கும் கோயில் திறந்திருக்கும்”

“பச்சைமலை, பவளமலையை திரிகூட ராசப்ப கவிராயர் ஒன்னா பாடிட்டார். அதே மாதிரி நீயும் பச்சை மலையை பத்தி சொல்லிட்டே. இப்ப பவளமலை பத்தியும் சொல்லிட்டீன்னா நல்லாயிருக்கும்''

“ சொல்லலாம். பச்சை மலைக்கு இணையா பவள மலையும் கோபிசெட்டிபாளையத்தில் முக்கியமானதாகும். கோபியில் இருந்து பாரியூர் போற வழியில முருகன் புதுாரில் இருந்து கூப்பிடும் தொலைவில் கிராமத்துக்குள் அமைஞ்சிருக்கு இந்த பவளமலை. இந்த பவள மலையும் மரங்கள் நிறைந்த அழகிய குன்று. மலை உச்சியில் முத்துக்குமாரசாமியாக இருக்கும் முருகனைக் காண படி ஏறி போகணும். இந்த கோயிலும் துர்வாச முனிவரால் தான் உருவாக்கப்பட்டது. ஒரு முறை வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் சண்டை ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் இருவரில் யார் பெரியவர் என போட்டி எழுந்தது.

வாயு தன் சக்தி எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்க்கிறேன் என சவால் விட்டு மலையுடன் மோத அதன் வேகம் தாங்காமல் மலை பாகங்கள் பெயர்ந்தன. அதில் ஒரு பகுதி தான் இந்த பவளமலை. இங்கு சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. மூலவர் முத்துக் குமாரசுவாமி பிரம்மச்சாரியாக உள்ளார். வாயு மூலையில் வள்ளி, தெய்வானை முருகனை மணம் முடிக்க தவம் செய்கிறார்கள். அதாவது திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு காணலாம். இந்த பவளமலையில் சிவனைப் போல முருகனுக்கும் திரிசத அர்ச்சனை நடக்கிறது”

“அது என்ன திரிசத அர்ச்சனை” என கேட்டான் யுகன்.

“சூரபத்மனை வதம் செய்த பின் மகிழ்ந்தார் இந்திரன். வானுலக தேவர்களை வரவழைத்து முருகனை பெருமைப்படுத்தும் விதமாக அர்ச்சனை செய்தார். அதுவே திரிசத அர்ச்சனை. எதிரியை வீழ்த்தும் திரிசத அர்ச்சனையில் முருகனின் 300 திருநாமங்கள் இடம் பெறும்.

முருகனின் ஒவ்வொரு முகத்துக்கும் 50 வீதம் ஆறு முகத்திற்கும் சேர்த்து 300 அர்ச்சனை செய்வதே திரிசத அர்ச்சனை. இதைச் செய்ய செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க, அரசியல் வெற்றிக்கு, தொழிலில் மேன்மை பெற திரிசத அர்ச்சனை செய்கிறார்கள். இந்த பவளமலை கோயில் 19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டு 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. பவளமலை முருகனை படியேறி வழிபட துன்பம் காணாமல் போகும்”

“அப்போ மலை மீதேற முடியாதவங்க போக முடியாதா பாட்டி?”

“தாராளமா போகலாம். பச்சை, பவள மலை இரண்டுக்கும் சாலை வசதி இருக்கு. பவள மலைக்கு கோயில் வாசலுக்கே கார் போகும்''

“நீ சொல்ல சொல்ல பச்சை மலை, பவள மலை கண்ணுக்குள்ளே நிக்குது பாட்டி”

''பவள மலையில் அழகிய குன்று, அமைதியான சூழல், சுத்தமான காற்று என நல்ல அம்சங்கள் இருக்கு. இந்த முருகனை தரிசித்தால் நோய்கள் தீரும், கஷ்டம் நீங்கும். அதோடு விருப்பம் நிறைவேறும். பாவ விமோசனம் பெற, ஆன்மிக உயர்வு பெற பக்தர்கள் வர்றாங்க” என முடித்தார் பாட்டி.

''நாமும் பச்சை மலை, பவளமலைக்கு போயிட்டு வரணுங்க” என்றாள் தேவந்தி ஆர்வமுடன்.

“பச்சைமலை பவளமலை எங்கள் மலை அம்மே” என கைகளில் தாளமிட்டு பாடியபடி விளையாட ஓடினான் அமுதன். மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us