ADDED : பிப் 11, 2011 02:12 PM
ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவர் அழகான குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அது மிகவும் விலைமதிப்புள்ளது. ஒருநாள், அது காணாமல் போய் விட்டது. அவனுடைய மனைவி, குழந்தைகள், உறவினர்கள் அந்தக் குதிரை காணாமல் போனது குறித்து மிகவும் வருந்தினார்கள்.
ஆனால், பக்திமானோ அதுபற்றி கவலைப்படவே இல்லை. கர்த்தர் எல்லா வற்றையும் நன்மைக்காகவே செய்தருளுவார் என்று நம்பிக்கையுடன் சொல்லி, தன்னைத் தேற்றிக் கொண்டார். என்ன ஆச்சரியம்! அந்தக் குதிரை சில நாட்கள் குறித்து திரும்பியது. தனியாகத் திரும்பவில்லை. இன்னும் பல குதிரைகளுடன் சேர்ந்து வந்தது. அந்த பக்தர் அவற்றைத் தனக்கு சொந்தமாக்கி மகிழ்ந்தார்.
சில நாட்கள் கழித்து, அந்தக் குதிரை பக்தரின் மகனின் காலில் மிதித்து விட்டது. அந்த இளைஞனுக்கு எலும்பு ஒடிந்து கடுமையான வலியில் துடித்தான். ''ஐயோ! உன் மகனின் காலை குதிரை மிதித்து விட்டதே! அவன் படாத பாடு படுவானே!'' என்று பக்கத்து வீட்டார் பக்தரிடம் விசாரித்தனர். அவர்களிடம் பக்தர்,''கர்த்தரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது,'' என்று பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள், அவன் வசித்த தேசத்தில் ஒரு பெரிய யுத்தம் வந்தது. வீட்டுக்கு ஒரு இளைஞன் யுத்தத்துக்கு செல்ல வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. பெரும்பாலானவர்கள் யுத்தத்தில் பங்கேற்று மரித்துப் போனார்கள். ஆனால், இளைஞனின் கால் ஒடிந்திருந்ததால், அவனுக்கு யுத்தத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது. அவன் உயிர் தப்பினான்.
நமது வாழ்விலும் இப்படித்தான் பல துயரச்சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்போதெல்லாம் நாம், ''ஏன் இப்படி வந்தது? எனக்கா இப்படி? நல்லவனாகவும், பக்தனாகவும் இருந்தும் இப்படி ஒரு கதியா?'' என்று கேட்டுக் கொள்கிறோம். ஆனால், கர்த்தருடைய நடத்துதலில் பழகின ஒவ்வொருவருக்கும் அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்வார் என்பது திட்டமாகத் தெரியும். காலம் உ<ருண்டோடி நித்தியத்திற்குள்ளே பிரவேசிக்கும் போது ஏன் என்ற கேள்விக்கு பதிலினை கர்த்தர் நமக்கு கட்டாயம் வெளிப்படுத்துவார். அப்போது, கர்த்தருடைய அனந்த ஞானம், கிருபை, வல்லமையை அறிந்து கொண்டு அவரைத் துதிப்போம்.
