வலி நிவாரணியை அமெரிக்கா பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தியது ஏன்?
பென்டானில் என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
பென்டானில் என்பது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்து. இது மருத்துவ உலகில் ஒருபுறம் முக்கிய மருந்தாக உள்ளது.
மறுபுறம் தவறாகவும் பயன்படுத்தப்படும்போது, உயிரை பறிக்கும் கொடிய போதைப் பொருளாக மாறுகிறது.
அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரின் மரணத்துக்கு, பென்டானில் போதைப் பொருளை பயன்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உண்மையில் பென்டானில் என்பது வலி நிவாரணியாக இருந்தாலும், இது ஒரு வலிமையான போதை பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் வீரியம் மற்றும் ஆபத்து காரணமாகவே அமெரிக்கா இதை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தியுள்ளது.
இது ஒரு செயற்கை ஓபியாய்டு ஆகும். இது மருத்துவ ரீதியாக, புற்று நோயால் ஏற்படும் கடுமையான வலி மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது மார்பினை விட 100 மடங்கும், ஹெராயினை விட 50 மடங்கும் அதிக வீரியம் கொண்டது.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, இதை ஊசி, மாத்திரை அல்லது தோலில் ஒட்டும் பேட்ச் வடிவில் பயன்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவ பயன்பாட்டிற்கு அப்பால், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பென்டானில், சந்தையில் விற்கப்படும் மற்ற போதைப் பொருட்களில் மிகக் குறைந்த அளவில் கலக்கப்படுகிறது.
உயிரை காக்க பயன்படும் மருந்தாக இருந்தாலும், தவறாக பயன்படுத்தும்போது அது ஒரு வெடிகுண்டை விட பயங்கரமான வேதியியல் ஆயுதமாக மாறுகிறது.