மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே

தேவையானப் பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ, கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப், உலர் மாங்காய் பொடி - 1 டீஸ்பூன், உப்பு, கடலை எண்ணெய் - தேவையானளவு.

மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன், சீரகத் துாள் - அரை டீஸ்பூன், மல்லித் துாள் - 1 டீஸ்பூன், சாட் மசாலா அல்லது கரம் மசாலா - 1 டீஸ்பூன்.

வெண்டைக்காயை தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் வெயிலில் காய விட்டு, தண்ணீர் நன்கு உறிஞ்சிய பின் அதிலுள்ள விதைகளை நீக்கி, நீளவாக்கில் வெட்டவும்.

ஒரு சொட்டு தண்ணீர் அல்லது ஈரத்தன்மை இருந்தாலும் கூட மொறுமொறுப்பு கிடைக்காது; ரோஸ்ட் போலவும் இருக்காது.

இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலக்கவும். பின், உலர் மாங்காய் பொடி, சாட் மசாலா அல்லது கரம் மசாலாவை சேர்க்கவும்.

தொடர்ந்து, மஞ்சள் துாள், சீரகத்துாள், மல்லித்துாள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து, 10 நிமிடம் அப்படியே நன்றாக ஊற வைக்கவும்.

கடாயில் சிறிது கடலை எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை உதிரி உதிரியாக எண்ணெயில் போடவும்.

மிதமான சூட்டில், 3 - 4 நிமிடங்களில் வெண்டைக்காய் குர்குரே தயாராகி விடும். ஆரம்பத்தில் நீக்கிய விதைகளை எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

இதை மாலை நேர ஸ்நாக் அல்லது மதிய வேளையில் குச்சி சிப்ஸ் போல கலவை சாதங்களுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.