ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும்; வெள்ளை மாளிகை ஆலோசகர்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும்; வெள்ளை மாளிகை ஆலோசகர்
ADDED : ஆக 22, 2025 09:17 AM

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவையில்லை. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 1 சதவீதத்திற்கும் குறைவாகவே எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்தது. ஆனால், தற்போது, சுமார் 35-40 வரை இறக்குமதி செய்கிறது. இன்னும் 6 நாட்களில் 2ம் கட்ட வரிவிதிப்பு வரப்போகிறது. இந்தியா அதனை விரும்பாது என்று நம்புகிறேன்.
இந்தியா எங்களிடம் பொருட்களை விற்று பெறும் பணத்தை, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க பயன்படுத்துகிறது. அந்த எண்ணெய்யை இந்தியா சுத்திகரித்து, அதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கிறது. ஆனால் ரஷ்யா அந்த பணத்தை மேலும் ஆயுதங்களை உருவாக்கும் பணிக்கே பயன்படுத்துகிறது. மேலும் அதன் மூலம் உக்ரைன் மக்களை கொல்கிறது. இதனால் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இந்தியா எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. பிரதமர் மோடி சிறந்த தலைவர். உலக பொருளாதாரத்தில் உங்களின் பங்கு என்ன என்பதை தயவு செய்து பாருங்கள். நீங்கள் செய்யும் செயலால் தற்போது அமைதி நிலவவில்லை. மாறாக, போரை நீட்டிக்கிறது, எனக் கூறினார்.