/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாடாய்படுத்தும் யானைக்குழாய் ரோடு தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள் குமுறும் விருதுநகர் மக்கள்
/
பாடாய்படுத்தும் யானைக்குழாய் ரோடு தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள் குமுறும் விருதுநகர் மக்கள்
பாடாய்படுத்தும் யானைக்குழாய் ரோடு தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள் குமுறும் விருதுநகர் மக்கள்
பாடாய்படுத்தும் யானைக்குழாய் ரோடு தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள் குமுறும் விருதுநகர் மக்கள்
ADDED : டிச 09, 2025 06:25 AM

விருதுநகர்: விருதுநகரின் நகராட்சி பகுதியில் இருந்து சிவகாசி செல்லும்ரோட்டிற்கும்இணையும் முக்கிய ரோடாக யானைக்குழாய் ரோடு உள்ளது. இந்த ரோடு மேடு, பள்ளமுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது.
விருதுநகர் மாவட்ட தலைநகராக உள்ள போதிலும், இதன் ரோடுகள் உண்மையில் இது மாவட்ட தலைநகர்தானா எனும் கேள்வி எழுப்பும் நிலையில் உள்ளன. எம்.ஜி.ஆர்., சாலையில் துவங்கி ராமமூர்த்தி ரோடு, சத்திய மூர்த்தி ரோடு, சிவகாசி ரோடுகள் என எல்லாமே மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதே நேரத்தில் தான் நெடுஞ்சாலைத்துறையும் தனது சிறு பால பணிகளை செய்துள்ளது.
மழை நேரத்தில் இது போன்று ரோடுகள் மோசமாக இருப்பதும், நல்லநிலையில் உள்ள ரோடுகளை தோண்டி சிறு பால பணிகள் செய்வதும் மக்களை துன்புறுத்துகின்றன. மக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல மாற்று பாதைகளை பயன்படுத்தி பயன்படுத்தி விரக்தி அடைந்துள்ளனர்.ரோடு பால பணிகளை விரைந்து முடிப்பதோடு சேதமான அனைத்து ரோடுகளையும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகரின் நகர்ப்பகுதியான டி.டி.கிருஷ்ணாமாச்சாரி ரோட்டில் இருந்து கவுசிகாநதியை கடந்து சிவகாசி ரோட்டை அடைய யானைக்குழாய் ரோடு உள்ளது. இது ஊராட்சி பகுதி என்பதால் ரோடு வசதி போதுமானதாக இல்லை. மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே நகராட்சி, ஊராட்சி என இருபகுதி மக்களும் ஆற்றின் கரை ஓரங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். கவுசிகா நதியை துார்வாரியும் கழிவுநீர் கலப்பது தொடர்கிறது.
இந்த யானைக்குழாய் ரோட்டை சிறு வணிகர்களில் துவங்கி, பலரும் பயன்படுத்தி சிவகாசி ரோட்டிற்கும், அதை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரோடு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ள நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த ரோடுகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தம் என்பதால் கண்டுக் கொள்வதே இல்லை. தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று சேதமாகி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சரி செய்ய வேண்டும். நகராட்சியை விரிவாக்கம் செய்தால் இந்த ரோடும் நகராட்சிக்குள் அடங்கும் வாய்ப்புள்ளது. எனவே வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு ரோடு பணியை துவங்க வேண்டும். அல்லது விரிவாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
இந்த ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் மழை பெய்யும் போது வருவோர் சறுக்கி விழுகின்றனர். எனவே இந்த ரோட்டை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கப்பாண்டியன், விறகு கடை, விருதுநகர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ரோட்டின் நிலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- லியாகத் அலி, பி.டி.ஓ., விருதுநகர்.

