ADDED : ஏப் 21, 2026 10:41 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இறுதி கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வரும் தேர்தலுக்கான ஓட்டு சாவடி அலுவலர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணி ஒதுக்கீடு ஊட்டியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா முன்னிைலை வகித்தார்.
பொது பார்வையாளர்கள் தான்வி சுந்த்ரியல், ஹரீஷ், சுஹாஸ், காவல் பார்வையாளர் லதா மனோஜ் ஆகியோர் தலைமையில் இப்பணிகள் நடந்தது.
ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு மொத்தம், 1,220 ஒட்டுச்சாவடி அலுவலர்களும், கூடலுார் (தனி) சட்டசபை தொகுதிக்கு, மொத்தம், 1,144 ஓட்டு சாவடி அலுவலர்களும்; குன்னுார் சட்டசபை தொகுதிக்கு, மொத்தம்,1,168 ஓட்டு சாவடி அலுவலர்களும் என மொத்தம் மூன்று தொகுதிகளில் உள்ள, 736 ஓட்டுச்சாவடிகளுக்கு, 3,532 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், 406 காவல் அலுவலர்களுக்கும், 93 நுண் பார்வையாளர்களுக்கும் சீரற்றமயமாக்கல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் தலைமையில், நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.
