ஓடும் பஸ்சில் பிறந்த குழந்தையை துாக்கி வீசிய தாய் கைது
ஓடும் பஸ்சில் பிறந்த குழந்தையை துாக்கி வீசிய தாய் கைது
ADDED : ஜூலை 17, 2025 01:10 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் ஓடும் பஸ்சில் பிறந்த ஆண் குழந்தையை ஜன்னல் வழியே வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மஹாராஷ்டிராவின் புனேவில் இருந்து பர்பானிக்கு ரித்திகா தேரே, 19, என்ற கர்ப்பிணி, தன் கணவர் என கூறப்படும் அல்தாப் ஷேக் என்பவருடன் நேற்று முன்தினம் காலை படுக்கும் வசதி உடைய தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பத்ரி - செலு சாலையில் சென்றபோது ரித்திகாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஓடும் பஸ்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் அந்த குழந்தையை துணியால் சுற்றி, ஷேக்குடன் சேர்ந்து பஸ்சில் இருந்து துாக்கி வீசினார். இது பற்றி அறிந்த பஸ் டிரைவர், எதை வீசினீர்கள் என கேட்டார். அதற்கு ஷேக், தன் மனைவி வாந்தி எடுத்ததால் அதை துணியில் வைத்து வீசியதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, அவ்வழியே சென்ற நபர் பஸ்சில் இருந்து வீசப்பட்ட துணியை பிரித்து பார்த்தபோது, அதில் பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்ததை மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.
அவர்கள் குழந்தை சடலத்துடன் விரைந்து வந்து பஸ்சை மடக்கி பிடித்தனர். அங்கிருந்த ஷேக் மற்றும் ரித்திகா தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் தம்பதி என்றும், புனேயில் கடந்த ஒன்றரை ஆண்டாக சேர்ந்து வாழ்ந்ததில் குழந்தை உண்டானதாகவும், அதை வளர்க்க வழி தெரியாததால், சாலையில் வீசியதில் குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் கணவன் - மனைவி என்பதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.