போட்டோகிராபர்
தயாரிப்பு : அப்துல் பாசித் சையத்
இயக்கம் : அஷ்ரப் அலி
நடிப்பு : அஷ்ரப் அலி, கருணாகரன், ஜனனி சாமிநாதன், சிவா, நரேன், தேவிமகேஷ்
ஒளிப்பதிவு : ரயீஸ்
இசை : ராஜ்குமார் சந்திரசேகரன்
வெளியான தேதி : ஆகஸ்ட்7, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
தொழிலதிபர் ஆடுகளம் நரேன் மகனான அஷ்ரப் அலிக்கு போட்டோகிராபியில் ஆர்வம். ஆனாலும், தான் இன்னும் சாதிக்கவில்லை என நினைக்கிறார். அப்பாவின் பிஸினஸ் பொறுப்பை ஏற்க மறுத்து, காதலியுடன் சண்டைபோட்டுவிட்டு கொடைக்கானலில் இருக்கும் மதிகெட்டான் சோலை பகுதிக்கு செல்ல நினைக்கிறார். அது அடர்ந்த வனப்பகுதி, அங்கே சென்றவர்கள் திரும்பமாட்டார்கள் என பயத்தில் அங்கே கைடு யாரும் வர மறுக்கிறார்கள். அங்கே சென்று தான் கேள்விப்பட்ட தங்க மரத்தை போட்டோ எடுக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார் அஷ்ரப். சூழ்நிலை காரணமாக அந்த காட்டில் தனியே சிக்க சில நாட்களை கழிக்கிறார். அவர் மனநிலை மாறுகிறது. பல விஷயங்கள் அங்கே நடக்கின்றன. அதிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? தான் ஆசைப்பட்டபடி அந்த தங்கமரத்தை கண்டுபிடித்து போட்டோ எடுத்தாரா என்பது போட்டோகிராபர் படத்தின் கதை. ஹீரோவே படத்தை இயக்கியிருக்கிறார்.
ஒரு அரிய மரத்தை போட்டோ எடுக்க நினைக்கும் ஒரு போட்டோகிராபரின் பயணமே இந்த கதைக்கரு. இதில் காதல், நட்பு, மர்மம், அம்மாபாசம், அமானுஷ்யம், பேண்டசி, திரில்லர் கலந்து கொடுத்து, தானே நடித்து இருக்கிறார் அஷ்ரப். ஆரம்பத்தில் அப்பாவுடன், நண்பன் கருணாகரனுடன், காதலி ஜனனியுடன் சண்டைபோடுவது, மனஸ்தாபத்தில் தவிப்பது என பல நிமிடம் வீணாக கழிகிறது. அவர் கொடைக்கானல் வந்து காட்டுக்குள்ளே செல்ல நினைப்பதில் இருந்து கதை சூடுபிடிக்கிறது. அந்த பகுதி பற்றி லோக்கல் மக்கள் பேசும் கதைகள், சாமியார், வைத்தியர் சொல்லும் விஷயங்கள் மர்மமாக இருக்கிறது. அந்த இடத்தில் ஓரளவு விறுவிறுப்பு.
காட்டுக்குள் தனியே மாட்டிக்கொண்டு பகல் இரவை கழிக்கும் பகுதிகள்தான் படத்தில் அதிக நேரம் வருகிறது. அதில் ஹீரோ மட்டுமே நடித்து இருக்கிறார். கொடிய விலங்கு, மர்மமான குரல், சண்டை என பல விஷயங்கள் அதில் இருந்தாலும் அதில் பல காட்சிகள் போராடிக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ்க்கு முன்பு அந்த மரம் தென்படுவது, அதிலிருந்து விரியும் பிளாஷ்பேக் காட்சிகள், அந்த மரம், இலை சொல்லும் தத்துவம், மனமாற்றம் ஆகியவை உளவியல் ரீதியாக டச்சிங். அத்துடன் படம் முடியும் என்று பார்த்தால் மீண்டும் சென்னை வந்து படத்தை இழுக்கிறார்கள். அவரின் மன மாற்றத்தை பல நிமிடங்கள் சொல்கிறார்கள். அதற்கு கத்தரி போட்டிருக்கலாம்.
பைலட்டான அஷ்ரப் இதில் கதைநாயகனாக ஓரளவு நடித்து இருக்கிறார். அவரின் சில குணங்கள், கடைசியில் அது மாறும் சம்பவம், அம்மா பாசம், அம்மா சொல்லும் கதைகள், அந்த அதிசய மரம் ஆகிய சீன்கள் புதுசாக இருக்கிறது. அவரும் சில இடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால், தனிமையில் சிக்கும் சீன்களை குறைத்து இருக்கலாம். அவர் நண்பராக வரும் கருணாகரன் ஆறுதல் கேரக்டர். அவர் காதலியாக வரும் ஜனனிக்கு அதிக வேலை இல்லை. வைத்தியராக வேல.ராமமூர்த்தி ஒரு சீனில் வந்துபோகிறார். காட்டை சுற்றி காண்பிக்கும் கைடாக வரும் சிவா கேரக்டர் ஈர்க்கிறது. குறைவான நடிகர்கள் நடித்தாலும் காடும், அந்த மரங்களும், அந்த அமைதியும் முக்கியமான கேரக்டராக வருகிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை காடு சம்பந்தப்பட்ட சீன்களை பல ஆங்கிளில் செதுக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரயீஸ். அவர் ஒளிப்பதிவை பார்ப்பது இதமாக இருக்கிறது. தேவை உணர்ந்து இயல்பான இசையை கொடுத்து இருக்கிறார் ராஜ்குமார். பிளாஷ்பேக் அம்மாவாக வரும் தேவிமகேஷ் அழகு. மற்றபடி வழக்கமான ஆடல், பாடல், காமெடி, கொண்டாட்டம் இல்லாத அழுத்தமான கதை. காட்டை, பயணங்களை நேசிப்பவர்களுக்கு போட்டோகிராபர் பிடிக்கும். மற்றவர்களுக்கு சலிப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு சில விஷயங்கள் புரியாது. அதேசமயம் உன்னிப்பாக கவனித்தால் படம் சொல்லும் விஷயம் சிலிர்க்கும்.
காடு, போட்டோகிராபி, அம்மா பாசம் என கதை இருந்தாலும் உளவியல் ரீதியாக பல விஷயங்களை சொல்கிறார் இயக்குனர். வாழ்க்கை என்பது என்ன? எப்படி வாழ வேண்டும். எப்படி ரசிக்க வேண்டும் என சொல்லி தருகிறார். சித்தர் பாடல்களும் அதற்கு பொருத்தமாக இருக்கிறது.
போட்டோகிராபர் - தங்கமரத்தை தேடும் போட்டோகிராபரின் பயணம்