உள்ளூர் செய்திகள்

டோரதி

தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
நடிப்பு: ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், முத்துகுமார், ராம்
ஒளிப்பதிவு : திரு
இசை: இளையராஜா
வெளியான தேதி: செப் 25, 2026
நேரம்: 2 மணி 26 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.75 / 5

மதுரையில் 1990களில் நடக்கிறது கதை. பள்ளி காலத்தில் இருந்தே ரிஷிகாந்த்தும், சனந்த்தும் உயிர் நண்பர்கள். அடிதடி, காதல், ரவுசு என சுற்றி திரிகிறார்கள். அவர் குடும்பத்தில் கீர்த்தி சுரேஷ் வந்தபின் சனந்த் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. திடீரென கீர்த்தி சுரேசுக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. அது என்ன? சனந்த்தும் ஆளே மாறுகிறார். ஆம், திருநங்கை ஆகிறார். அதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள். நீயே உன் நண்பனை கொல் என்று ரிஷிகாந்த்துக்கு பிரஷர் கொடுக்கிறார்கள் சனந்த் குடும்பத்தினர். அது நடந்ததா? ரிஷிகாந்த், சனந்த் நட்பு எப்படி முடிந்தது? இதுதான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி படத்தின் கதை. டோரதி என்பது ஒரு கிரேக்க தெய்வத்தின் பெயர். கீர்த்திசுரேசின் கேரக்டர் பெயர். படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

இரண்டு நண்பர்களின் நட்பு, குடும்ப, ஊர் பிரச்னை, சண்டை, காதல், மோதல் என செல்லும் கதை, 2ம்பாதியில் யாரும் எதிர்பாராத இன்னொரு திசைக்கு நகர்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதைக்களத்தில் ஒரு நட்பை, காதலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். உலக சினிமாவை, அந்த ரசிகர்களை மனதில் கொண்டு, ஆனால், முழுக்க, முழுக்க மதுரை மண் மணத்தில் ஒரு மாறுபட்ட சினிமாவை கொடுத்திருக்கிறார்.

நண்பர்களாக வரும் ரிஷகாந்த்தும், சனந்த்தும் கிட்டத்தட்ட மதுரை இளைஞர்களாகவே மாறியிருக்கிறார்கள். அவர்களின் தெனாவெட்டான உடல்மொழி, தோற்றம், பேச்சு, அடிதடி, முன்கோபம், செயல்பாடுகள் என அனைத்தும் அந்த ஏரியா டோனுக்கு மாறியிருக்கிறது. நட்பு காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். முதற்பாதி மதுரை என்றால், அடுத்த பாதி வட இந்தியா, லாரி பயணம் என செல்கிறது. அதில் இருவரும் பண்பட்ட நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

கொஞ்சம் தடம் மாறினாலும் கதையும், கேரக்டரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் திருநங்கையாக மாறி அவஸ்தை படும் காட்சிகளில், நண்பனின் ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் காட்சிகளில் சனந்த் நடிப்பு அக்மார்க். அதேபோல், நண்பனை 'அப்படி' பார்க்க முடியாமல் கோபப்படும் இடங்களில் ரிஷிகாந்த்தும் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஒரு இடத்தில் சனந்த்தை 'டி' போட்டு பேசுவார் ரிஷிகாந்த். அந்த இடத்தில் அவ்வளவு கைத்தட்டல். அதேபோல், கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது.

கொஞ்சம் நேரம் வரும் கேரக்டர். ஹீரோக்களுக்கு ஜோடி இல்லை. ஆனாலும், கதைக்கு வலு சேர்க்க, ஈகோ பார்க்காமல் நடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் கேரக்டர் ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்ல, இன்னொரு தரப்புக்கும் பிடிக்கும். அதேசமயம், அவர் கேரக்டர், அவருக்கு ஏற்பட்ட முடிவு குறித்த விஷயங்கள் பாதியில் நிற்கிறது. கீர்த்தி சுரேஷ் முகம், உடல் அமைப்பில் கொஞ்சம் டல் அடிப்பது ஏனோ? இவர்களை தவிர, சனந்த் அப்பாவாக, வயதான தோற்றத்தில் வரும் முத்துகுமார் யாருப்பா இவர் என கேட்கவைக்கும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். விசில் அடித்துக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனம் மனதில் நிற்கிறது.

ரிஷிகாந்த் அண்ணனாக வரும் சவுந்தரராஜா, மதுரை அடியாளாக வரும் ராம், திருநங்கை ஜீவா ஆகியோரும் மனதில் நிற்கும் கேரக்டர்கள். ரிஷிகாந்த், சனந்த் சின்ன வயது போர்ஷனில் நடித்த சிறுவர்களும் சரியான தேர்வு. திருநங்கைகளுக்கு, பெண்களுக்கு ஆதரவாக பல வசனங்கள் நச். மனித மனத்தின் இன்னொரு கொடூர முகம், பெண்களுக்கு எதிரான மனநிலை, ஆதிக்க, அதிகார வர்க்கத்தின் பெருமை என பல விஷயங்களை, பல சீன்களில் சொல்லியிருப்பது சிறப்பு.

1990களில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்துக்கே சென்று காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. இடைவேளைக்கு பின் வரும் வட இந்திய சீன்கள், கிளைமாக்ஸ், பாடல்களில் வரும் அழகியில் அவரின் அனுபவம், ரசனையை காட்டுகிறது. இந்த படத்துக்கு பெரிய பலம் அல்லது உயிர் என்றால் அது இளையராஜாவின் இசைதான். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை ராஜாவும் விளையாடியிருக்கிறார். அவ்வப்போது வரும் பழைய பாடல்களின் ரிதம், பலமுறை நாம் கேட்ட பிரபலமான பின்னணி இசை, சரியான இடத்தில் சரியான கருவிகளின் நாதம் என கலக்கியிருக்கிறார்.

'கல்யாண விருந்து' துள்ளல் இசை என்றால், 'முத்துமணி' வேறு ரகம். அதிலும் அந்த உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் காட்சியை அவர் குரலும், அந்த இசையும், பாடலும்தான் ரசிக்க வைக்கிறது. இளையராஜா இசை இல்லாவிட்டால் இந்த படமும், கதையும், காட்சிகளும், கிளைமாக்ஸ்சும் வேறு திசைக்கு சென்று இருக்கும், கடும் விமர்சனங்கள், சர்ச்சைக்கு கூட உள்ளாகி இருக்கும். காலத்தின் ஓட்டம் அறிந்து, இந்த கதைக்கு இசையமைத்த இளையராஜாவையும் பாராட்டி ரசிக்கலாம்.

வழக்கமான மதுரை, அடிதடி, வெட்டுகுத்து என ஒரு பக்கம் கதை சொன்னாலும், ஒரு முக்கியமான விஷயத்தை, தமிழில் இதுவரை சொல்லப்படாத, திருநங்கை, நட்பு, காதல் விஷயத்தை கத்திமேல் நடக்கும் வகையிலான கருவாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதில் விரசம், ஆபாசம், முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை. ஆனாலும், அந்த கருவை சிலர் ரசிக்கலாம். பலர் விமர்சனம் செய்யலாம். சிலர் கடுமையாக எதிர்க்கலாம். பிரதாயங்களில் ஊறியவர்கள், கலாசாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், அந்தவகை ஆதரவுக்கு எதிரானவர்கள் முகம் சுளிக்கலாம். அவர்களுக்கு இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ் செட்டாகாது. ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

மாற்று சினிமா, உலக சினிமா, புதுமை, பாலின சமத்துவம் என பேசுபவர்களுக்கு கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய சீன்கள் ரசிக்க வைக்கலாம். ஆனால் குடும்பம், பண்பாடு, கலாசார நடைமுறைகளுடன் வாழும் சராசரி தமிழக, இந்திய ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சியாக, முகம் சுளிக்கும் வகையில் இருக்கலாம். இது சரியா? இப்ப, இந்த கதை தேவையா என கோபமாக கேட்கலாம். ரசிப்பதும், வெறுப்பதும் அவரவர் மனநிலை பொறுத்தது.

டோரதி - உயிர் நண்பன் திருநங்கை ஆகிவிட்டால்...



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !