டிஎன் 2026
தயாரிப்பு : கண்ணன் ரவி குரூப்ஸ்
இயக்கம் : உமாபதி.எஸ்.ராமையா
நடிப்பு : நட்டி, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, சாந்தினி, ஷெரிட்டா ராவ்
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இசை : தர்புகா சிவா
வெளியான தேதி : ஏப்ரல் 10, 2026
நேரம் : 2 மணிநேரம் 18 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
சென்னை அண்ணாநகரில் குல்கந்து விற்கும் ஒருவர் திடீரென சினிமாவில் நுழைந்து பெரிய ஸ்டார் ஆகிவிடுகிறார். அப்புறமென்ன, அடுத்தகட்டமாக அரசியலில் என்ட்ரி ஆகி சிஎம் ஆக பிளான் பண்ணுகிறார். அந்த ஆசை நிறைவேறியதா? இதுததான் தம்பி ராமையா கதை, வசனத்தில் அவர் மகன் உமாபதி இயக்கிய டிஎன்.2026 படத்தில் கதை. சரியாக தமிழே பேசத்தெரியாமல் டக்கென ஹீரோவாகி, அரசியலில் உயர நினைக்கும் குல்கந்த் குமார் கேரக்டரில் நடித்து இருப்பவர் நட்டி நட்ராஜ்
இந்த நடிகர், அந்த நடிகர் என்று பாராமல், அந்த கட்சி, இந்த கட்சி என்று யோசிக்காமல் அனைவரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து எடுத்த அரசியல் சட்டையர் கதை. தேர்தல் நேரத்தில் வருவது இன்னும் ஸ்பெஷல். படத்தின் முதற்பாதியை கலகலவென கொண்டு செல்பவர் கதைநாயகன் நட்டி தான். ஹிந்தி கலந்த தப்பு, தப்பாக தமிழ் பேசும் குல்கந்த் குமார் ஆக 1980களில் அறிமுகம் ஆகிறார் நட்டி. அவரின் ஓபனிங் காட்சிகள் காமெடி கலந்த கிண்டல் ரகம். அதிலும் பொள்ளாச்சியில் நடக்கும் அந்த படப்பிடிப்பு, அது சம்பந்தப்பட்ட காட்சிகள் செம. டயலாக், டான்ஸ், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் ரசிக்க வைக்கிறார் நட்டி. ஜமீன்தாரரான தம்பிராமையா எம்ஜிஆர் தீவிர ரசிகர். அடுத்து நட்டி மீது பாசம் கொண்டு அவரின் திரையுலக வளர்ச்சிக்கு உதவுகிறார். அரசியலிலும் ஜொலிக்க பிளான் போட்டு கொடுக்கிறார்.
நட்டி, தம்பிராமையா இணைந்து வரும் காட்சிகள் படத்துக்கு பிளஸ். நட்டியின் வளர்ச்சி, தம்பி ராமையாவின் வீழ்ச்சி, மரியாதை, பேச்சு மாறும் இடங்கள் சூப்பர். அதேபோல் நட்டியின் காதல், அடுத்த காதல், மனைவியுடன் சண்டை இதெல்லாம் சில, பல ஹீரோக்களின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.
அப்பாவி ஹீரோவாக இருந்து அதிரடி ஆக் ஷன் ஹீரோவாக நட்டி மாறும் இடங்கள், அடுத்து அவரின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சியுடன் மோதல் இதெல்லாம் விறுவிறுப்பு. ஆனால், இடைவேளைக்குபின் அவர் கேரக்டரில் ஏனோ உற்சாகம் குறைந்து போய்விடுகிறது. அந்த அரசியல் ஹீரோ மாதிரி நடிப்பதால், உம்மென இருக்கிறார். அதை சரி செய்து இருந்தால் படம் இன்னும் பெரிய ஹிட்டாகி இருக்கும்.
தன்னுடைய கதை, வசனம், மகன் இயக்கும் படம் என்பதால் ஜமீன்தாரர், நட்டியின் வலது கை, அரசியலில் பொதுச் செயலாளர், இன்னும் சில பரிமாணங்கள் என அவ்வளவு உற்சாகமாக, தனக்கே உரிய காமெடி ஸ்டைலில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமையா. அவரின் கேரக்டரும், வசனங்களும் பலரை நினைவுப்படுத்துகிறது.
நட்டி மனைவியாக வரும் ஷெரிட்டா ராவ் அமைதியான பரதநாட்டிய டான்சராக வந்து, பின்னர் நட்டி வாழ்க்கையில் தாண்டவம் ஆடுகிறார். ஆரம்பகால ஹீரோயினாக வரும் சாந்தினி நடிப்பும், இரண்டாம்பாதியில் அவர் கொடுக்கும் அதிர்ச்சியும் அருமை. அதேப்போல் ரெடின்கிங்ஸ்லீயும் தீவிர ரசிகராக வந்து சிரிக்க வைக்கிறார். மற்ற கேரக்டர்களின் சினிமாதனம் அதிகம். படத்தின் இன்னொரு பிளஸ் சரமாரியாக வந்துவிடும் வசனங்கள். வாய்ப்பில்லை ராஜா ஒருவர் பேசும்போதும் கை தட்டல்.
நட்டியின் அறிமுகம், அவரின் வளர்ச்சி, ஆளுங்கட்சியுடன் மோதல் என முதற்பாதி படு ஸ்பீடாக செல்கிறது. அடுத்த பாதி நடிகர் விஜயை, கமல்ஹாசனை, ரஜினியை இன்னும் சிலரை நினைவுப்படுத்துகிறது. அதில் நிறைய குழப்பம், சுவாரஸ்யம் இல்லை. கிளைமாக்சையும் சப்பென முடித்து இருக்கிறார்கள். அதில் வரும் நடிகர்கள், காட்சிகள் நம்பும்படியாக இல்லை. சீமான் உட்பட பல அரசியல்வாதிகளின் கேரக்டர், சில பெயர்கள் ஆங்காங்கே வருகிறது. அட, இது அவராச்சே என புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்பிராமையா புத்திசாலிதனம். சில கேரக்டர், சில டயலாக் யோசிப்பதற்குள் கடந்து விடுகிறது. இரண்டாவது முறை ரசித்து பார்த்தால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவும், தர்புகா சிவா இசையும் ஓகே ரகம்.
முதல்பாதியில் இருந்த நக்கல், நையாண்டி, நடிப்பு, அரசியல் கிண்டல் இரண்டாம்பாதியிலும் இருந்தால் படம் பெரிய ஹிட்டாகி இருக்கும். கதை அரசியல் பாதையில் சீரியஸ் டிராக் மாறுவது செட்டாகவில்லை . கூவத்துார் ரிசார்ட் பார்ட்டி, விஜய், ரஜினி, கமல் குறித்த சீன்கள் இழுக்கிறது. காமெடி டோனும் மிஸ்சிங். அதை சரி செய்து இருந்தால் இந்த சமயத்தில் இந்த படம் பெரிய பேசுபொருளாகி இருக்கும்.
டிஎன்2026 - ஹீரோக்கள், அரசியல்வாதிகளை கலாய்க்கும் ஸ்பூப் ரகம்