லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)
தயாரிப்பு: ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கீரின் ஸ்டூடியோ
இயக்கம்: விக்னேஷ்சிவன்
நடிப்பு: பிரதீப்ரங்கநாதன், கிர்த்திஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, ஆனந்த்ராஜ், சீமான்
ஒளிப்பதிவு: ரவிவர்மன்
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
வெளியான தேதி: ஏப்ரல்.10. 2026
நேரம்: 2 மணிநேரம் 36 நிமிடம்
ரேட்டிங்: 2.75 / 5
தொழிலதிபரான எஸ்.ஜே.சூர்யா டிஜிட்டல் உலக டான். தனது நிறுவனம் மூலம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற ஒரு ஆப் உருவாக்குகிறார். மோதிரம் மாதிரியான ஒரு டிவைசை கையில் அணிந்து கொண்டு, அதன் மூலம் பார்ட்னர் தேடலாம். தங்கள் லவ்வர் என்று செலக்ட் செய்பவர்களை கண்காணிக்கலாம். டேட்டாக்கள் மூலமாக அந்த லவ்வர் சரியானா தேர்வா? என்பதை மார்க் மூலமாக அறிந்து கொள்ளலாம். மார்க் குறைந்தால் லவ் செட்டாகாது என புரிந்துகொண்டு பிரேக்அப் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஆப் மூலமாக இணையும் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி ஜோடிக்கு 3% மார்க் மட்டுமே கொடுக்கிறது எல்ஐகே ஆப். எனக்கும், உனக்கும் செட்டாகாது என்று கிர்த்தி ஷெட்டி பிரிய, ஒரு மிஷின் எப்படி காதலை தீர்மானிக்கும். இதயம்தானே முடிவெடுக்கும். அந்த ஆப் சொல்வது தவறு, என் காதலியுடன் சேருவேன். அந்த கம்பெனி டுபாக்கூர்னு நிரூபிக்கிறேன் என்று சபதம் செய்துவிட்டு எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதுகிறார் ஹீரோ பிரதீப். அவரை மீண்டும் கிர்த்தி ஷெட்டி காதலித்தாரா? எஸ்.ஜே.சூர்யா அவரை சேரவிடாமல் ஏன் தடுக்கிறார். கடைசியில் அந்த ஆப் என்னவானது? இதுதான் எல்ஐகே படத்தின் கதை. சரி, இந்த மாதிரி ஆப் சாத்தியமா என்று கேட்கலாம். கதை 2040ம் ஆண்டில் நடக்கிறது.
ஒரு ஆப், ஒரு காதல், மோதல், அப்பா பாசம், டிஜிட்டல் உலகின் மோசமான பக்கம் என்ற ரீதியில் வித்தியாசமாக சிந்தித்து, ஜென் ஜீ கிட்ஸ்களுக்கு பிடித்தமாதிரி, கொஞ்சம் மார்டன் லவ்வர்களை கவரும் வகையில் படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதற்கேற்ப கேரக்டர்களையும் உருவாக்கி இருக்கிறார். ஹீரோவாக வரும் பிரதீப் ரங்கநாதன் வழக்கமான துறுதுறு நடிப்பில் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் மட்டுமல்ல, அப்பா பாசத்திலும் கவனிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் ஓகே. குறிப்பாக, கிளைமாக்சில் எஸ்.ஜே.சூர்யா ஆபீசில் அவருடனும், ரோபோக்களுடன் அவர் போடுகிற பைட் பிரமாதம். ஆனால், முந்தைய படங்களில் பார்த்த அதே முகபாவம், அதே ஓவர் எமோஷன், கத்துறது, கெட்டவார்த்தை பேசுவது இதிலும் தொடர்கிறது. அது போரடிக்கிறது. அந்த ஹேர்ஸ்டைலை கூட மாத்தவில்லை. அடுத்த படத்திலாவது மாறுங்க ப்ரோ
ஹீரோயினாக வரும் கிர்த்தி ஷெட்டி அழகு பொம்மை மாதிரி இருக்கிறார். பாடல் காட்சியில் பட்டையை கிளப்புகிறார். ஆனால், நடிப்பு விஷயத்தில் இன்னும் தேற வேண்டும். அவர் அம்மாவாக வருகிறார் வாளமீனுக்கும் புகழ் மாளவிகா. லைக், வியூஸ்க்கு அடிமையான அவர் கேரக்டரும் கச்சிதம். அவருடன் இருக்கும் கேரக்டர் யோகி பாபுவுக்கு அவர் கெட்அப், டயலாக் டெலிவரி, அவரின் செயல்கள் அனைத்துமே சிரிப்பை வரவழைத்து இருக்கணும். ஆனால், போரடிக்கிறது. சில சமயம் எரிச்சலைடைய வைக்கிறது.
ஹீரோ அப்பாவாக வருகிறார் சீமான். துாயதமிழ் பேசுவதும், மகன் மீது அவர் அன்பை காண்பிப்பதும், செல்போன், டிஜிட்டல் யுகத்துக்கு எதிரான அவரின் கருத்தும் நச். இன்னும் அவரை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். எஸ்.ஜே.சூர்யா உதவியாளராக வரும் ஆனந்த்ராஜ் அவ்வப்போது அமர்களம் செய்து இருக்கிறார்.
ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நடிப்பு, காஸ்ட்யூம், டயலாக்கால் சுண்டி இழுப்பவர் எஸ்.ஜே.சூர்யாதான். தனக்கே உரிய ஸ்டைலில் வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். அவருக்கும், பிரதீப் ரங்கநாதனுக்குமான கோல்டு வார் படத்தின் உயிர். குறிப்பாக, இடைவேளைக்குபின் அவர் இன்னும் மிரட்டி கிளைமாக்சில் இன்னும் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஹீரோ தோழியாக வரும் கவுரி கிஷன் முதல்முறையைாக கவர்ச்சி காண்பித்து இருக்கிறார்.
2040ல் சென்னையில் கதை நடக்கிறது. கிராபிக்சில் அதை நிறைய அழகாக காண்பித்து இருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் உழைப்பு தெரிகிறது. ஆனால், அதுவே சில இடங்களில் கண்களை கூச வைக்கிறது. தனது நண்பர் என்பதால் வழக்கம்போல் தீமா உட்பட 3 பாடல்களில் ரசிக்க வைத்து இருக்கிறார் அனிருத். வருங்கால உலகத்தை அழகாக காண்பித்து இருக்கிறது ரவிவர்மன் கேமரா. ஆங்காங்கே கண்ணை உருத்தும் கலர் விஷயம் மட்டும் அதில் மைனஸ்.
2040ம் ஆண்டு, அப்போதைய சென்னை, மார்டன் விஷயங்கள், டிஜிட்டல் அடிமைகள், செல்போன் பாதிப்பால் சிறப்பு முகாம் செல்பவர்கள், லைக்ஸ், வியூஸ்க்காக தங்கள் சந்தோஷத்தை, நிம்மதியை தொலைப்பவர்கள், அதில் தவறு செய்பவர்களுக்கு பசுமை உலக தண்டனை, புது ஆப் என நிறையவே யோசித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால், பல காட்சிகளில் உணர்ச்சிபூர்வமான விஷயம் இல்லை, உயிர் இல்லை. படம் முழுக்க ஹீரோவும், மற்ற கேரக்டர்களும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள், அது காது வலியை ஏற்படுகிறது. முதற்பாதியில், இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட தேவைற்ற சீன்கள். இன்னும் கத்தரிபோட்டு இருக்கலாம். கிளைமாக்சில் இருக்கும் கிண்டல், ரசிப்புதன்மை, ஈர்ப்பு மற்ற காட்சிகளில் இல்லை. முதற்பாதி இழுக்கிறது. இளைஞர்கள் ரசிக்கலாம். மற்றவர்கள் கனெக்ட் ஆவது கஷ்டம்.
எல்ஐகே - பிரதீப் ரங்கநாதனின் அசுர வளர்ச்சிக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ஸ்பீடு பிரேக்கர்