உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 'புதிய பறவை'க்காக தியேட்டரை புதுப்பித்த சிவாஜி

பிளாஷ்பேக் : 'புதிய பறவை'க்காக தியேட்டரை புதுப்பித்த சிவாஜி

1958ம் ஆண்டு இங்கிலாந்து எழுத்தாளர்கள் சேர்ந்த டேவிட் டி.ஒஸ்பான், சார்லஸ் சிங்களேயர் எழுதிய நாவல் 'சேஸ் ஏ க்ரூக்டு ஷேடோ' என்ற பெயரில் திரைப்படமானது. இந்த படத்தை 1963ல் ஹரிதாஸ் பட்டாச்சார்யா வங்க மொழியில் ரீமேக் செய்தார். இந்த படத்தை பார்த்த சிவாஜி இதனை தயாரித்து நடிக்க விரும்பினார்.

சிவாஜி பிலிம்ஸ் தொடங்கப்பட்டு ஹிந்தி படங்களை தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் தனது முதல் தமிழ் படமாக இந்த படத்தை இயக்கினார். படத்தின் உரிமத்தை வாங்கி 'புதிய பறவை' என்று பெயரும் வைத்தார். சிவாஜிக்கு தனக்கு பிடித்த பாலிவுட் இயக்குநர் தாதா மிராசியை அழைத்து வந்தார். ஆங்கில படம், வங்கப் படம் இரண்டையும் கலந்து தமிழுக்கு ஏற்றவாறு புதிய கதையாக உருவாக்கினார் தாதா மிராஸி. ஆருர் தாஸ் வசனம் எழுதினார்.

மலேசியாவில் மனைவி சவுகார் ஜானகி சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்து விடும் சிவாஜியை, மலேசிய போலீசான சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா ஆகியோர் சிவாஜியோடு உறவாடி எப்படி அவரை கைது செய்கிறார்கள் என்பதுதான் கதை.

சிவாஜி, எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோரின் நடிப்பும், மெல்லிசை மன்னர்களின் பாடல்களும் புதிய பறவையை காவியமாக்கின. குறிப்பாக கே.எஸ்.பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது. படம் 133 நாள்கள் ஓடி லாபத்தை ஈட்டியது. தற்போது அதிக அளவில் தயாராகும் பேமிலி திரில்லர் கதைக்கு பிள்ளையார் சுழி போட்டது புதிய பறவை.

இந்த படத்தில் சிவாஜியின் ஸ்டைல் பிரபலமானது. அதிலும் குறிப்பாக சிகரெட் ஸ்டைல் அன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிக்கு முன்பே சிகரெட் ஸ்டைலை சிவாஜி கொண்டு வந்திருந்தார்.

சிவாஜி ரசித்து, நடித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை சிவாஜி தனது சாந்தி தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது ராஜ்கபூர் நடித்த 'சங்கம்' என்ற ஹிந்திப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இதனால் ராஜ்கபூர் 'தனது படம் சாந்தி தியேட்டரிலேயே தொடர வேண்டும். அந்த தியேட்டரின் வசதி மற்ற தியேட்டர்களில் இல்லை' என்று சிவாஜியிடம் சொன்னார்.

ராஜ்குமார் சிவாஜியின் குடும்ப நண்பர் என்பதால் அதை ஏற்றுக்கொண்ட சிவாஜி, பேரகன் தியேட்டரை தேர்வு செய்தார். 'புதிய பறவை' படத்தை வெளியிடுவதற்காக தனது செலவில் அந்த தியேட்டரை புதுப்பித்தார். நவீன ஒலி அமைப்புகளை அமைத்தார். அதன்பிறகு படம் வெளியிடப்பட்டு அங்கு வெள்ளி விழா கொண்டாடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !