உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை

பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை


எந்தவொரு நடிகராக இருந்தாலும் அவரது 100வது படம் முக்கியமானதாகும். அந்த படத்தின் வெற்றி அதைவிட முக்கியமானதாகும். அதனால் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது 100வது படத்திற்கு ரொம்பவே மெனக்கெடுவார்கள். அப்படி கவனமாக இருந்தும் தோல்வியை சந்தித்த நடிகர்களும் உண்டு.

அந்த வகையில் சிவாஜியின் 100வது படமான 'நவராத்திரி' அதுவரை வெளிவந்த அவரது படங்களில் அவரது நடிப்பிற்கு சிகரம் வைத்த மாதிரி அமைந்தது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. புராண படங்கள் மூலம் புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் சிவாஜியின் 100வது படத்தை இயக்குவது என்று முடிவானபோது சிவாஜி சொன்ன விஷயம், 'இந்த படத்தில் இதுவரை சினிமாவில் எவரும் செய்யாத ஒன்றை செய்ய வேண்டும். எதற்கும் நான் தயார். படத்தில் கையை வெட்டுவது போன்று ஒரு காட்சி வையுங்கள் நிஜமாகவே வெட்டிக் கொள்கிறேன்' என்றாராம் சிவாஜி. ஆனால் ஏ.பி.நாகராஜன் 'அந்த அளவிற்கு போக வேண்டாம். இந்த படத்தில் நீங்கள் 9 கேரக்டர்களில் நடிக்க வேண்டும் அதுவே சாதனையாக இருக்கும்' என்றார் சிவாஜி மகிழ்ச்சியோடு ஒப்புக் கெண்டார்.

9 கேரக்டர்கள் என்றால் சும்மா வந்து போகிற கேரக்டர்கள் அல்ல... இளைஞன், பணக்காரர், ரவுடி, தொழுநோயால் பாதிப்படைந்தவர், மருத்துவர், கூத்துக்கட்டுபவர் என ஒவ்வொரு விதமான கேரக்டரை, ஒவ்வொரு விதமாகப் பண்ணியிருப்பார் சிவாஜி. டெக்னாலஜி, டிஜிட்டல், கிராபிக்ஸ் என பெயர் கூட உச்சரிக்காத காலகட்டத்தில்தான், இந்த ஒன்பது கதாபாத்திரங்களை ஒரே பிரேமிற்குள் கொண்டு வந்தது. இன்றளவும் பேசப்படுகிற ஒன்று.

கல்லூரியில் படிக்கும் மாணவி உடன் படிக்கும் மாணவனைக் காதலிப்பார். இந்த சமயத்தில், பெண்ணின் தந்தை, திருமணம் செய்துவைக்க முடிவு செய்வார். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பார். இதைக் கேட்டு நொந்து போவார் மகள். ஆனால் தான் காதலிப்பவன் தான், மாப்பிள்ளையாக தன்னைப் பார்க்க வரப்போகிறான் என்பதை அறியாமல், வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள் மகள். அப்படி வீட்டை விட்டு வந்த பெண், ஒன்பது நாட்கள் ஒவ்வொருவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார். அந்த ஒன்பது இரவுகள்தான் 'நவராத்திரி'யின் கதை.

நவரசங்கள் எனப்படும் அற்புதம், இரக்கம், பயம், கோபம், சாந்தம், சிங்காரம், வெறுப்பு, வீரம், ஆனந்தம் ஆகிவற்றுக்கு கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் 9 கேரக்டர்களும். இந்த ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக எதிர்கொண்டு பத்தாவது கேரக்டராக நிமிர்ந்து நிற்பார் சாவித்ரி. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், நவராத்திரி பேசப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !