உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி அளித்த இளம் நடிகர், நடிகைகளின் மரணங்கள்

தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி அளித்த இளம் நடிகர், நடிகைகளின் மரணங்கள்


திரையில் நட்சத்திரமாக ஜொலித்த பல நடிகர், நடிகைகளின் வாழ்க்கை இருண்ட பக்கங்களாக இருந்துள்ளது. பெரிய நடிகர்களாக வளர்ந்து, திரையுலகில் உச்சம் தொடுவார்கள் என திரைதுறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல நடிகர், நடிகைகள் இளம் வயதிலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்துள்ளார்கள். அப்படி திரைத்துறையை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்திய இளம் நடிகர், நடிகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குணால் (30 வயது)
1999ல் 'காதலர் தினம்' திரைப்படம் ரிலீஸான போது, தமிழகத்தில் உள்ள அத்தனை பெண்களின் மனதையும் கொள்ளையடித்தவர் குணால். ரோஜா ரோஜா, என்னவிலை அழகே பாடல்களில் வலம் வந்த அந்தச் சாக்லேட் பாய், சில ஆண்டுகளிலேயே பட வாய்ப்புகள் குறைந்ததால் கடுமையான தனிமைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளானார். 2008ல் மும்பை வீட்டில் அவர் எடுத்த முடிவு, ஒரு தலைமுறையின் காதல் நாயகனை நம்மிளிடமிருந்து பறித்துக்கொண்டது.

மோனல் (21 வயது)
பிரபல நடிகையான சிம்ரனின் தங்கையான மோனல், 'பார்வை ஒன்றே போதுமே', 'பத்ரி' போன்ற வெற்றிப் படங்களில் நடித்து வளர்ந்து வரும் கதாநாயகியாக வலம் வந்தவர். சிம்ரனை போல் இவரும் உச்ச நடிகையாக வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2002ம் ஆண்டு காதல் தோல்வி காரணமாக தனது 21வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷோபா (17 வயது)
'பசி' படத்தில் தன் எதார்த்தமான நடிப்பால் 17 வயதிலேயே இந்திய சினிமாவின் உயரிய 'தேசிய விருது' வென்றவர் ஷோபா. வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்து புகழின் உச்சம் தொட்டார். ஆனால், விருது பெற்ற சில மாதங்களிலேயே தனிப்பட்ட வாழ்க்கையின் உணர்ச்சிப் போராட்டங்களைத் தாங்க முடியாமல் 1980ல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

சவுந்தர்யா (31 வயது)
'படையப்பா' நீலாம்பரியையே அசரவைத்த நடிகை. 90களின் இறுதியில் ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சவுந்தர்யா. 2004ல் தேர்தல் பிரசாரத்திற்காக அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியானது இந்திய சினிமாவையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வி.ஜே. சித்ரா (28 வயது)
தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தொடங்கி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முல்லையாக ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைக்கும் சென்றடைந்தவர் சித்ரா. வெள்ளித்திரையிலும் பிரகாசிக்கத் தொடங்கிய தருணத்தில், 2020ல் நட்சத்திர ஹோட்டல் அறையில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், புகழுக்கு பின்னால் இருக்கும் கடுமையான அழுத்தத்தையும் மன உளைச்சலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சில்க் ஸ்மிதா (35 வயது)
80 மற்றும் 90களில் தென்னிந்திய சினிமாவையே தன் காந்தக் கண்களாலும் நடிப்பாலும் ஆட்டிப் படைத்தவர். கவர்ச்சி கன்னியாக வலம் வந்தாலும், கதாநாயகர்களுக்கு இணையான விநியோக சந்தை மதிப்பைக் கொண்டிருந்த அவர், தனது 35வது வயதில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மறைவு திரையுலகை உலுக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !