பிளாஷ்பேக்: இந்தியத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய பெருமைக்குரிய ஒரே திரைப்படம்
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், பின்னணி இசை, இயக்கம், நடிகர்களின் பங்களிப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் அற்பணிப்பு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் அப்பால், அத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிக நாட்கள் ஓடக் கூடிய ஒரு திரைப்படமாக பலம் பெருகிறது என்றால், பார்க்கும் பார்வையாளர்கள் ஒரு முறைக்கு பல முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்தாலேயன்றி அது சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை. இந்த அற்புதங்கள் எல்லாம் அந்தக் காலம் தொட்டே ஒரு சில திரைப்படங்களுக்கு நிகழ்ந்துமிருக்கின்றது.
எம் கே தியாகராஜ பாகவதரின் “ஹரிதாஸ்” திரைப்படம் சென்னை 'பிராட்வே' தியேட்டரில் மட்டும் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி, ஓர் புதிய சாதனையைப் படைத்திருந்தது. இதன் பின்பு வந்த எம் ஜி ஆரின் “எங்க வீட்டுப் பிள்ளை”, “அடிமைப் பெண்”, “உலகம் சுற்றும் வாலிபன்” சிவாஜியின் “பராசக்தி”, “பாசமலர்”, “வசந்த மாளிகை” என இவர்களது பல திரைப்படங்கள் அந்நாளில் வெள்ளிவிழா கண்டு, வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களாகும். 1989ம் ஆண்டு வெளிவந்த நடிகர் ராமராஜனின் “கரகாட்டக்காரன்” திரைப்படம் கூட, ஓராண்டு வரை ஓடி, ஒரு புதிய மைல் கல்லை எட்டி, அசாத்திய சாதனை ஒன்றையும் பதிவு செய்திமிருக்கிறது.
இதே போன்று ஹிந்தி திரையுலகிலும், “மொகல் ஏ ஆஸம்” என்ற பழைய திரைப்படம் ஒன்று மூன்று ஆண்டுகள் வரை அந்நாளில் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றது. 1975ம் ஆண்டு வெளிவந்த “ஷோலே” திரைப்படம் 5 ஆண்டுகள் வரை ஓடி ஒரு மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது. இந்த வரிசையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்திராத ஒரு அசுர சாதனையை படைத்து, இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக மிக அதிக நாட்கள் ஓடிய ஓர் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை அடைந்திருக்கும் ஓர் திரைப்படத்தைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
100 நாட்கள், 200 நாட்கள், 1 வருடம் என்பதை எல்லாம் தாண்டி, ஏறக்குறைய 31 வருடங்களாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றது என்றால் எவராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. அப்படி ஒரு அசாத்தியமான சாதனையைப் படைத்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஹிந்தித் திரைப்படம்தான் “தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே”. 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 அன்று வெளிவந்த இத்திரைப்படத்தின் நாயகன் ஷாருக்கான், நாயகி கஜோல். படம் வெளியான நாளிலிருந்து, மும்பையில் உள்ள “மராத்தா மந்திர்” என்ற திரையரங்கில் இத்திரைப்படம், 31 ஆண்டுகளாக இன்னும் அங்கு ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்பதற்கு ஓர் நம்பத் தகாத விஷயமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
ஆதித்ய சோப்ரா இயக்கத்தில், ஷாருக்கான், கஜோல், அம்ரிஷ்பூரி, பரீதா ஜலால், அனுபம்கேர், மந்திரா பேடி என பலரது நடிப்பில் ஒரு வண்ணமயமான காதல் கதையாக வெளிவந்த இத்திரைப்படம், காலை 11:30 மணி காட்சியாக இன்று வரை எவ்வித தங்கு தடையுமின்றி அங்கு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் இந்தத் திரைப்படம்தான் இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்கள் ஓடிய, இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு திரைப்படமாகவும் தனது சாதனையைப் பதிவு செய்திருக்கின்றது.