பிளாஷ்பேக்: வெற்றிப் படங்களை மட்டும் இயக்கி விட்டு சினிமாவை விட்டு விலகியவர்
சேலத்தைச் சேர்ந்தவர் ஆர்.சுப்ரமணி என்கிற ஆர்.எஸ்.மணி, தனது திரையுலகப் பயணத்தைத் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில், மாத சம்பளத்தில் படத்தொகுப்பாளராகத் தொடங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த, தமிழில் படங்களை இயக்கிய எல்லிஸ் ஆர்.டங்கனுடன் இணைந்து 'காளமேகம்' (1938) திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
பின்னர் சென்னை வந்த ஆர்.எஸ்.மணி 'ஜூபிடர் பிக்சர்ஸ்' நிறுவனத்தில் படத்தொகுப்பாளராகச் சேர்ந்தார், அங்கு 'கண்ணகி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1942ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே நிறுவனத்திற்காக 'குபேர குசேலா' (1943) என்ற படத்தையும் இயக்கினார். பி.யு.சின்னப்பா மற்றும் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சாதாரண கதையை கூட தனது எடிட்டிங் திறமையால் அசாதாரண கதையாக மாற்றியர் ஆர்.எஸ்.மணி. 'கிருஷ்ண பக்தி, தேவகி, சித்ராங்கி, இன்ஸ்பெக்டர், ரத்தபாசம், புனர்ஜென்மம்' போன்ற பல பிரபலமான திரைப்படங்களை இயக்கினார். மேலும், 'மாமன் மகள்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.
ஆர்.எஸ்.மணி இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள்தான், என்றாலும் அவர் அதிகமான படங்கள் இயக்கவில்லை. திடீரென ஆன்மிக வாழ்க்கைக்கு திரும்பிய மணி சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.