உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மகாபாரத்தை தழுவி மணிரத்னம் இயக்கிய 'தளபதி'

பிளாஷ்பேக் : மகாபாரத்தை தழுவி மணிரத்னம் இயக்கிய 'தளபதி'

1991ம் ஆண்டு வெளியான 'தளபதி' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கிளாசிக் படமாகக் கொண்டாடப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அரவிந்த்சாமி இந்தப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

மகாபாரதத்தின் கர்ணன் - துரியோதனன் நட்பை அடிப்படையாகக் கொண்டு, நவீன கால பின்னணியில் இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. மகாபாரதத்தில் கர்ணன் மற்றும் துரியோதனனின் நட்பு என்பது உண்மையான பாசம், தியாகம் மற்றும் மாறாத விசுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகப் போற்றப்படுகிறது.

பெற்ற தாயால் தனித்து விடப்பட்டவர் கர்ணன். சுயமாக தன்னை உருவாக்கி கொள்வார். குருச்சேத்திரத்தில் நடந்த வில்வித்தைப் போட்டியில் கர்ணன் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவன் என்று கூறி அவமானப்படுத்தப்பட்டான். அப்போது அவனுக்கு ஆதரவு கரத்தை நீட்டி, அங்க தேசத்தின் அரசனாக்கி உரிய மரியாதையை வழங்கியவன் துரியோதனன். தனக்குச் செய்த இந்த உதவிக்கு ஈடாக கர்ணன் தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாரான உண்மையான நண்பனாக மாறினான் என்பது மகாபாரதம்.

'தளபதி' படத்தின் கதையும் அதுதான். தாயால் ரயிலில் கைவிடப்பட்டு ஆதரவற்ற அனாதையாக வளரும் சூர்யா (ரஜினிகாந்த்), தனது பகுதியில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். ஒரு சூழ்நிலையில் அந்தப் பகுதியின் சக்திவாய்ந்த நிழலுலக தாதாவான தேவராஜை (மம்முட்டி) சந்திக்கிறார். சூர்யாவின் தைரியத்தைக் கண்டு வியக்கும் தேவராஜ், ஒரு குற்றச் செயலுக்காக சிறைக்கு சென்றவரை காப்பாற்றி, அவரைத் தனது தளபதியாக மாற்றிக் கொள்கிறார். இருவருக்கும் இடையே பிரிக்க முடியாத நட்பு உருவாகிறது.

இளையராஜா மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான கடைசி படம் இது. ராக்கம்மா கையத்தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சின்னத்தாய் அவள், காட்டுக்குயிலு மனசுக்குள்ளே போன்ற அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. சந்தோஷ் சிவனின் புதுமையான இயற்கை ஒளிப் பயன்பாடும், கோணங்களும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தன.

படம் பெரும் வெற்றி பெற்றாலும் இந்த படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபத்தை தரவில்லை என்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !