'ஐ ஆம் கேம்' தோல்வி ஏன்? : துல்கர் சல்மான் விளக்கம்
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக இருப்பவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் 2023ல் வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படத்திற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த 'ஐ ஆம் கேம்' படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் 50 கோடி வசூலைக் கூட நெருங்கவில்லை என்பது தகவல்.
நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்தார் துல்கர். அப்போது ஒரு ரசிகர் 'ஐ ஆம் கேம்' படத்தின் தோல்வி குறித்து கேட்டதற்கு, “சில சமயங்களில், நம் தரப்பில் நாம் அனைத்தையும் சரியாகச் செய்தாலும், வெளிப்புறக் காரணிகளோ அல்லது பிற சூழல்களோ அந்த விஷயங்களையே தலைகீழாக மாற்றிவிடக்கூடும்.
ஒரு திரைப்படத்தின் இறுதி முடிவை அல்லது வெளியீட்டைப் பகுப்பாய்வு செய்வது எளிது. ஆனால் ஒரு படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை தேவைப்படுகிறார்கள். இது ஒருபோதும் எளிதானதோ அல்லது சாதாரணமானதோ அல்ல. இதற்கென தனியாக சூத்திரங்களையோ அல்லது கல்விசார் கோட்பாடுகளையோ பயன்படுத்தவும் முடியாது.
உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ வேண்டுமென்றே தவறுகளையோ அல்லது மோசமான படத்தையோ உருவாக்க நினைப்பதில்லை. நிஜ வாழ்க்கையிலேயே எல்லாமே நாம் நினைத்தபடியா நடந்திருக்கின்றன ? அப்படியிருக்க, ஒரு உள்வட்டக் குழு மற்றும் பல வெளிப்புறக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பை (திரைப்படத் தயாரிப்பை) நினைத்துப் பாருங்கள்.
நான் எப்போதும் என் குழுவிற்குத் துணையாக நிற்பேன்; யாரையாவது குறை சொல்ல விரும்பினால், நீங்கள் என்னைக் குறை சொல்லலாம்,” என்று பதிலளித்துள்ளார்.
2023ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'சீதா ராமம்' வெற்றிக்குப் பின்பு துல்கர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா, ஐ ஆம் கேம்' ஆகிய படங்களும், தமிழில் நடித்து வெளிவந்த 'காந்தா' படமும் தோல்வியைத் தழுவியது. 2024ல் வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' தெலுங்குப் படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது.