லாபகரமான நிலையில் அன்பில் அவன் : ஹீரோ, தயாரிப்பாளர் அசோக் செல்வன்
அன்பில் அவன் பட வெற்றி விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான அசோக் செல்வன் பேசியதாவது: 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் 'அன்பில் அவன்' படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் என பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்து பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குனர் கார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் கவுதம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்துக்காக அனைவரும் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எனது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவும் முக்கியமானது. என் அக்கா அபி உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.