உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி-யில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' புதிய சாதனை

ஓடிடி-யில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' புதிய சாதனை

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக செப்டம்பர் 11ம் தேதியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓடிடியில் வெளியான இரண்டு நாட்களிலேயே உலக அளவிலான ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் இப்படம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 லட்சம் பார்வைகளும், 1 கோடியே 46 லட்சம் நிமிடங்கள் பார்க்கப்பட்டும் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

செப்டம்பர் 14ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான வாரத்தில் டாப் 3 இடத்திலிருந்து டாப் 1 இடத்திற்குச் சென்றுள்ளது. 58 லட்சம் பார்வைகளுடனும், 1 கோடியே 54 லட்சம் நிமிடங்கள் பார்க்கப்பட்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த வாரத்தில் டாப் 3யில் தெலுங்குப் படமான 'இருமுடி', டாப் 7ல் தமிழ்ப் படமான 'மொத ராத்திரி' ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தென்னிந்தியப் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட 2வது படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளதாம். இதற்கு முன்பாக 'புஷ்பா 2' படம் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கிறது. 14 நாடுகளில் டாப் 1 இடத்தில் தற்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் இருக்கிறது.

கலவையான விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு இருந்தாலும் ஓடிடி தளத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் படமாக தற்போது இருந்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !