மருதநாயகம் முதல் சங்கமித்ரா வரை... பாதியில் கைவிடப்பட்ட மெகா படங்கள்
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர், பல கோடி செலவில், மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது என பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, ஷூட்டிங் வரை சென்று, பிறகு தவிர்க்க முடியாத பல காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் பல உள்ளன. அப்படி பெரிய நடிகர்கள் நடிப்பில் உருவாக இருந்து, ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி, பிறகு அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் சத்தமில்லாமல் கைவிடப்பட்ட மெகா படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
மருதநாயகம் (கமல்ஹாசன்)
தயாரிப்பு ஆண்டு: 1997
காரணம்: நிதி நெருக்கடி
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய முகமது யூசுப் கானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டு இதன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையால் படம் பாதியிலேயே நின்றது.
கரிகாலன் (விக்ரம்)
தயாரிப்பு ஆண்டு: 2011
காரணம்: தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பட்ஜெட் உயர்வு
எல்.ஐ.கண்ணன் இயக்கத்தில் கரிகால சோழனின் வரலாற்றுப் பின்னணியில் உருவான படம். படத்திற்கான அறிவிப்பு டீசர் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அதிக செலவு காரணமாகவும், கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட சிக்கலால் கைவிடப்பட்டது.
சபாஷ் நாயுடு (கமல்ஹாசன்)
தயாரிப்பு ஆண்டு : 2017 இறுதியில்
காரணம் : கமல்ஹாசனுக்கு காலில் அடிப்பட்டு சிகிச்சையில் இருந்ததால் டிராப்
'தசாவதாரம்' பலராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அமெரிக்காவில் 40 சதவீதத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மாடி படியில் இருந்து சறுக்கி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு காலில் அடிப்பட்டது. இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு, சிகிச்சை போன்றவற்றால் தாமதமானது. பிறகு கொரோனா ஊரடங்கும் வந்ததால் பணி முற்றிலும் நின்று போனது.
கெட்டவன் (சிம்பு)
தயாரிப்பு ஆண்டு : 2008
காரணம் : கருத்து வேறுபாடு, பட்ஜெட்
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2008-ல் தொடங்கப்பட்டு, பாடல்கள் பதிவாகி சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.
ராணா (ரஜினி)
தயாரிப்பு ஆண்டு : 2011
காரணம் : ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு
‛ராணா' படம் 2011ல் துவங்கப்பட்டது. வரலாற்றுப் பின்னணியில் தயாராக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட நின்றது. தீவிர சிகிச்சைக்கு பின் அவர் மீண்டு வந்தாலும் இந்த படத்திற்கு அதிக உடல் உழைப்பு தேவைப்படும் என்பதால் டிராப் ஆனது.
வேட்டை மன்னன் (சிம்பு)
தயாரிப்பு ஆண்டு: 2011
காரணம்: நிதி சிக்கல்கள் மற்றும் திரைக்கதையில் இருந்த சில குறைகள்
சிம்பு நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தொடங்கப்பட்ட 'வேட்டை மன்னன்' படம் சில மாதங்கள் படப்பிடிப்பு நடந்தும், நிதி நெருக்கடி மற்றும் திரைக்கதையில் இருந்த சில குறைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
சங்கமித்ரா (விஜய்)
தயாரிப்பு ஆண்டு: 2016 - 2017
காரணம்: தேதிகள் ஒதுக்கீடு மற்றும் நீண்டகால தயாரிப்புப் பணிகள்
சுந்தர்.சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்க திட்டமிடப்பட்ட மிகப்பிரமாண்ட வரலாற்றுப் படம் 'சங்கமித்ரா'. 'பாகுபலி' திரைப்படத்திற்குப் போட்டியாக சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதை உருவாக்கத் திட்டமிட்டனர். ஆனால் இது வரலாற்று படம் என்பதால் இந்த ஒரு படத்திற்காக மட்டும் 2 முதல் 3 ஆண்டுகள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருந்தது. இதனால் இந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்து விட்டார். பிறகு விஜய் சேதுபதி, சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியாக ரவி மோகன் மற்றும் ஆர்யா முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக பிறகு அந்த படம் கை விடப்பட்டது.
இதிகாசம் (அஜித்குமார்)
தயாரிப்பு ஆண்டு: 2001
காரணம்: தயாரிப்பு மற்றும் கதை சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள்
சரவணா சுப்பையா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'சிட்டிசன்' படத்திற்குப் பிறகு இந்தப் கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டது. இப்படம் சாதியப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பிறகு சில தயாரிப்பு மற்றும் கதை சார்ந்த சில நடைமுறைச் சிக்கல்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
ஏ.சி (சிம்பு)
தயாரிப்பு ஆண்டு: 2006-2007
காரணம்: கால்ஷீட் மற்றும் தயாரிப்பு சிக்கல்கள்
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு - அசின் ஜோடியாக உருவாக இருந்த படம் 'ஏ.சி'. அருணாசலம், சித்ரா கதாபாத்திரத்தின் சுருக்கமாக தலைப்பு வைக்கப்பட்டு, படத்திற்கான போட்டோஷூட்களும் நடந்து முடிந்தன. ஆனால், அதன் பிறகு படத்தின் தயாரிப்புப் பணிகள் மற்றும் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் தேதிகளில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்களால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட காத்திருப்புக்கு பின்னும் துவங்கப்படாததால் கைவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னதாக அந்தப்படத்தை தானே இயக்கி, நடிக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்தார். ஆனால், இன்னும் துவங்கப்படவில்லை.